பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் நெகிழ்ந்து, உணர்ச்சி வயப்படலானார் நந்தினி விலாசம் ரஞ்சித்; “தாய் அறியாத சூல் உண்டா? உன்னை அறிஞ்சவன் நான்; உன்னை உணர்ந்துகிட்டவன் நான்: உன்னை உடலாலும், உள்ளத்தாலும், உணர்வாலும், உண்மையாலும், சத்தியத்தாலும், தருமத்தாலும் புரிஞ்சுக்கிட்டவனும் நானேதான்! சரிதானே, ரஞ்?” என்பதாக விசாரணை நடத்தினார்.

“என்னோட தெய்வ அத்தான் சரியாய்த்தான் சொல்லுவாங்க; சொன்னால், சரியாகத் தான் இருக்குமுங்க!”

“பாபு நம்பளைச் சோதிச்சுப் பிறந்தவன், ரஞ்சனி!”

“நம்மளைச் சோதிக்கப் பிறந்தவனும் இதே பாபு தானுங்க, அத்தான்!”

மருண்டார் ரஞ்சித்.

ரஞ்சனி மிரளவில்லை.

பூந்தோட்டப் புல்வெளி வெளிச்சம் போட்டது.

முகப்பு மண்டபத்தில் ரதி-மகேஷ், ஜோடி சேர்த்து, ஜோடி சேர்ந்து மின்னினார்கள்.

ரஞ்சனியின் ஒரக்கண்களில் ஒரம்கட்டி, ஒரம்காட்டி நீர்த்துளிகளைச் சுண்டி எறிந்தவர் சாட்சாத் ரஞ்சித்தான்.

விம்மியவளும் ரஞ்சித்தின் ரஞ்சனிதான்!...

“திரும்பவும் யோசனையிலே மூழ்கிட்டீயே, ரஞ்சனி?”.

“திரும்பவும் யோசனை என்னை மூழ்கடிச்சுக்கிட்டு இருக்குங்க, அத்தான்!-தெய்வம்தான் புதிர் போடும்னு கேள்விப்பட்டிருக்கேன்; ஆனா இப்ப நம்ப பாபுவே நம்மளுக்குப் புதிர் ஆகிட்டானே, அத்தான்?”

145