பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தடவை கூப்பிட்டுவிட்டால் போதும்; அக்காளுக்குக் கோபமான கோபம் ‘ஜெட்’ பாய்ச்சலில் வந்து தொலைத்து விடும். அதுவும் ஒரு காலம்தானோ?

“அத்தான்,” என்றாள் ரஞ்சனி.

“என்ன, ரஞ்...?” என்றார் ரஞ்சித். அவர் தமது வாழ்வின் ஜீவனை ‘ரஞ்’ என்றே செல்லமாகக் கூப்பிடுவார். ‘ரஞ்’ என்றால், ரஞ்சனி என்பதாக அவர் அகராதியில் பொருள்; பொருள் பொதிந்த பொருள் அல்லவா அவள்!

அவள் என்னவோ சொல்ல, அல்லது, என்னவோ பேச நினைத்திருக்க வேண்டும்.

அவர், அதற்காகவே காத்திருந்தார். மரத்துப் போயிருந்த பாதங்களைச் சற்றே அவசரமாக நகர்த்த எத்தனம் செய்த நேரத்தில், மயில்கண் ஜரிகை வேட்டியின் கரை இழைகளில் வலது கால் பெருவிரல் சிக்கிக் கொண்டது; தட்டித் தடுமாறினார் சமாளித்துக் கொண்டு வேட்டியைச் சீராக்கிக் கொண்ட வேளையில்தான், தொலைபேசிக் கருவி அவர் பார்வையில் சுழன்றது; அவரும் சுழன்றார். நினைவுகள் தோல் உரித்துக் கொண்டன: இதயத்தின் இதயத்தில் மெளனமானதொரு சோகம் உள் வட்டமாகத் திமிறிக்கொண்டே யிருக்கிறதே?---பாவம்! ... எதை நினைப்பார்? எதை மறப்பார்? நினைவும் மறதியும்தான் வாழ்க்கையா?--சரி, சரி!-- மிஸ்டர் மகேஷ் கொச்சியிலிருந்து இங்கே பட்டணத்துக்கு வந்ததும் வராததுமாக, அன்போடும் ஆசையோடும் விசாரணை செய்ததை இப்போதாவது ரஞ்சனியிடம் ஞாபகமாகத் தெரிவித்துவிட வேண்டும்!-ரஞ்சனி மிரண்டால், காடு கொள்ளும்; ஆனால், இந்த வீடு கொள்ளாது: கொள்ளவே கொள்ளாது! ஊமைத்தனமான புன்னகையில், சோகத்தின் கனம் கரைந்து கொண்டிருக்கலாம்.

15