பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்ப் புறத்துப் பூந்தோட்ட வெளியில் மொய்த்திருந்த கண் விரிப்பை இழுத்துப் பக்கவாட்டில் திருப்பினரி பாங்கர் ரஞ்சித்.

நல்ல காலம். ‘மாக்ஸி’ தளதளக்க, மாடிக்கு ஓடிக் கொண்டிருந்தாள் நந்தினி. பாதித் தூக்கத்தில் வந்தவள் ஆயிற்றே இனிமேல், காலைச் சிற்றுண்டிக்கும், பிறகு, டி.வி. பார்க்கவும்தான் கீழே வருவாள்!

ரஞ்சித்துக்கு நல்ல மூச்சு வந்தது: “ரஞ்...” என்று விளித்தார்; பாசம் துடிக்க, நேசம் துள்ள விளித்தார்.

அப்பொழுதுதான் ‘மைனர்’ நீங்கிய பிள்ளையாண்டான் மாதிரி, தன் மார்பிலே உரசிக் கொண்டு வந்து நின்ற அத்தானை நாணம் விழி பிதுங்க ஏறிட்டு நோக்கினாள் ரஞ்சனி. பேசும் அந்தக் கண்கள், தனக்குத் திருப்பூட்டின. இந்தப் புண்ணியவானின் ‘ராசலீலை’க் காட்சிகளைப் பேசினபோலும்!-நாணிக் கண் புதைக்கிறாள்.

ரஞ்சித் மகா ரசிகர். ஆசையான மனைவியின் கண்கள் ஆசையாகச் சொன்ன அந்தக் கதைகளில் அவரும்தான் மயங்கி விட்டிருக்க வேண்டும். சுயப் பிரக்ஞை உறைத்தது. பொட்டிட்டு அழகு பார்த்த பொன் முகத்தைப் பூ விரல் நீக்கி, ஒரு பொன் சிரிப்புடன் அவர் நிமிர்த்திவிட்ட கோணமும் பாவனையும் நுட்பமான கலைச் செறிவோடு அமைந்திட, அருமையான ரஞ்சனியைப் பெருமையாக ஊடுருருவினார்.

அப்போது:

நாணம் மேலிட்ட முதலிரவுப் பதுமையெனவே இன்னமும் நின்று கொண்டிருந்தாள் ரஞ்சனி. நிமிர்ந்திருந்த முகத்தில், நெற்றித் திலகம் கம்பீரமாக உயர்ந்திருக்க, கண்கள் மட்டிலும் கலக்கம் அடைந்து, ஏன் அப்படித் தாழ்ந்திருக்கின்றன?

16