பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறைப்பு சற்றே தூக்கலாக இருந்துவிட்டால், அத்தானுக்குக் கொண்டாட்டம் வந்துவிடும் அந்தரங்கத்தை அந்தரங்க சுத்தியோடு உணர்ந்தவள் ரஞ்சனி. அத்தான் இம்மாதிரி ருசி பார்த்து, சுவை பார்த்து, ஓய்வாகச் சாப்பிட வேண்டுமென்பதற்காகத்தானே, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே தக்காளிச் சட்டினியை ஸ்பெஷலாகத் தயாரிக்கிறாள் அவள்!-- ‘அ...த்... தான்!’--உள்ளத்தின் உள்ளம் உருகுகிறது.

ரஞ்சித்தின் பார்வை முகப்பு மண்டபத்திற்கு நாலு கால் பாய்ச்சலில் ஒடியது. என்னவோ சத்தம் கேட்டது. மகேஷையும் காணவில்லை; பாபுவையும் காணோம். சோமையா எதையாவது சீராக்கிக்கொண்டிருக்கலாம். அன்றிருந்த சுறுசுறுப்பு இன்றும்கூட தேய்ந்து விடவில்லை. மனக் குதிரைக்கு ‘லகான்’ போடவில்லையென்றால், அது கண்மண் தெரியாமல், கிண்டி ஞாபகத்தில் ஒடிக்கொண்டு தான் இருக்கும். நிதானம் பரப்பிக் கண் பார்வையை எதிர்வசமாகப் பரப்பினார் அவர். தெளிவாகவே நின்றிருந்த மனைவியை ஆழமாக நோக்கினார். “ரஞ், என் பசி இன்னமும் அடங்கவில்லையே?” என்றார்.

அவள் உணர்ச்சி எதையும் வெளிக்காட்ட விரும்பாதவள் போன்று காணப்பட்டாள்; அமுதசுரபியாகக் காட்சி கொடுத்த இட்டிலிப் பாத்திரத்தை நிதானமாக நகர்த்தினாள்; அம்பாரமாகக் குவிந்திருந்த இட்டிலியில் ஒன்றை எடுத்துக் கணவரின் எச்சில் பிளேட்டில் போட்டாள்; “இதோட உங்க கணக்குச் சரி!” என்றாள் ரஞ்சனி. .

ரஞ்சித் திகைத்துத் திடுக்கிட்டுத் தடுமாறினார்: “என்ன சொல்றே, ரஞ்சனி” என்று பதற்றத்தோடு கேட்டார். குரல் பொருமிற்று. பற்பல மாதங்களுக்கு முந்தின சோதனை மிகுந்த, துரதிர்ஷ்டவசமானதோர் அந்தி மாலை நேரத்திலே நடந்த அந்தச் சோகச் சம்பவம்-‘விதி’ முன்னே நின்று

26