பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலைச் சிற்றுண்டிக்காக அருமைத் திருமகளை அன்புடன் தேடிக் கொண்டிருந்த தாய்க்கு இப்போது ‘உளவு’ புரிந்திருக்க வேண்டும்.

தந்தையின் நெஞ்சக்கரையிலும் ‘பாப் இசை’யின் நாத அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. ஊடாக, பழைய நினைவலைகளும் சங்கமம் ஆகிக் கரை சேருகின்றன.

ஒரு நடப்பு:

பாபு இதே மாதிரியான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஹாஸ்டலிலிருந்து இங்கே வந்திருந்தான். துரைசாமி ரோடிலிருந்து மடங்கி, பனகல் பார்க்கைக் கடந்து, முப்பாத்தம்மனுக்கும் ஒரு கும்பிடு கொடுத்துவிட்டு, வடக்கு உஸ்மான் சாலை நெடுகிலும் கால் நடையாக நடந்தே வந்திருந்தான்!-அவன் ஓர் அபூர்வரகம்!-- அபூர்வ ராகம் மாதிரி! கால் தூசு போக, பங்களாவின் பூந்தோட்டக் குழாயைத் திருகி மூடிவிட்டு, கனிந்து வரும் பசுவின் கன்றாகப் பாய்ந்து வந்து, முகப்பு மண்டபத்தில் இளையராஜாவாக நின்றான்; சீரணி உடுப்புக்களைச் சீராக்கிக் கொண்டான். “அப்பா!”

ரஞ்சித் ஓடி வந்தார்.

“அம்மா!” என்று கூவினான் பாபு.

ரஞ்சனி தேடி வந்தாள்.

இருவருக்கும் ஆளுக்கொரு முத்தம் கிடைத்தது.

இருவரும் ஆளுக்கொரு முத்தம் கொடுத்தார்கள்,

பாசத்திற்குச் சிரிக்கத் தெரிந்தது போலவே, அழவும் தெரிந்திருந்தது. பாசத்தின் முதலுக்கு உண்டான வட்டியைக் கணக்குப் பார்த்து நேர் செய்து விடுவதென்பது அவ்வளவு லகு இல்லை என்பதற்கு அடையாளங்களா இந்தச் சிரிப்பும் அழுகையும்?

30