பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனுக்கு உறக்கம் பிடிக்காது; ஊண் பிடிக்காது: நல்லபடியாக வந்து சேர்ந்து விடவேண்டும். அம்மாக்காரிக்கு இப்போதே இருப்புக்கொள்ளவில்ல; வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள், பாவம்!...பாபு!...

‘ஒருவேளை, எங்கள் குடும்ப நண்பரான மிஸ்டர் மகேஷ்தான் கூப்பிட்டிருப்பாரோ? இரண்டு, இரண்டரை நாழிகைக்கு முன்னதாக, அந்த ஊதாப்பூ நிற நாட்குறிப்பில் நான் மூழ்கிப்போயிருந்த, நெருக்கடியானதும் சோதனையானதுமான வேளையில்-என் ரஞ்சனியும் காணாமற் போய்விட்ட சமயத்தில், என்னை நிர்ப்பந்தப்படுத்திக் காதுக்கும் காதுக்குமாகப் பேசித் தன் உள்ளத்தின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய உயிர் நண்பர் மகேஷ் பேசிக் கொண்டிருக்கையில், தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அது சரி; அது இயற்கை; செயற்கைச் சக்தியின் விதிகூட சோதிப்புக்கு ஆளாவதும் இயற்கையாகத் தான் இருக்குமோ?-அவர் விரும்பியிருக்கும் பட்சத்தில், எத்தனையோ தரம் கூப்பிட்டிருக்கலாம்; கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள். அவரோ, பட்டணத்தைத் துறந்து ஒடிப்போனவர்; இப்போது திரும்பியிருக்கிறார் . அவருக்குத் தொலைபேசிக்கா பஞ்சம்? ...ம்... என்னவோ, பேசவில்லை. வாழ்க்கையிலே ஒரு பற்று, பற்றுதல் இருக்கவேண்டாமோ? ---அசல் சாமியார்தான்!---சாமியாரிலும் சாமியார், ஒண்ணாம் நம்பர் நவநாகரிகச் சாமியாராக்கும்!...’

டங் ... !

சிந்தனை நமைச்சல் ஒய்ந்தது; மனம் விழித்துக் கொண்டது. உயிருக்கு இனியவள் நின்ற திசைக்குப் பார்வையைத் திசை திருப்பியபோது, செய்திகளை வாங்கிக் கொடுக்கும் உபகரணத்தை ஆத்திரத்துடன் ‘டங்’ என்று ‘ரெஸ்’டில் வைத்துவிட்டு, நிச்சலனமாக ரஞ்சனி திரும்பி விட்டதைக் காண நேர்ந்தது. ரஞ்சித் புழுங்கினார்!

46