பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“பேச்சு மூச்சைக் காணல்லே; ரெண்டு செகண்ட் பார்த்தேன்; பேச்சுமூச்சுக் காட்டாம , வச்சிட்டேன். ராங் நம்பரோ, என்னமோ?-ஊம்...அவசிய அவசரம் உள்ளவங்க, முறையோட கூப்பிடுவாங்க; நீங்க கிளம்புங்க, அத்தான்,” என்று சொல்லி, புருஷனை வழிகூட்டி வைத்து விட்டு, உணவுக் கூடத்துக்கு விரைந்தாள். ‘முசுட்டுப் பொண்ணு பலகாரத்தைத் தின்னுதோ, என்னமோ?’-- அத்தானுக்கு வராத கோபம் வந்துவிட்டால், அகப்பட்டவர்கள் பாடு சந்தி!-‘ என் மகள் தப்பாகப் பேசமாட்டாள்; நீதான் தப்பாகப் பேசிட்டே!’-எவ்வளவு நிர்த்தாட்சண்யமாகப் பேசிவிட்டார். இவர்? ஆனாலும், என்னுடைய நந்தினிப் பெண்ணுக்கு இப்படி வாய் நீளக்கூடாது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று நந்தினி போட்ட குண்டு அவள் மனத்தில் வெடிக்கவில்லை; உறுத்தியது: கனத்தது; நீள்மூச்சில் தவித்தாள் ரஞ்சனி.

வேடிக்கைதான்!

சுவரிலும் காலம் ஓடுகிறது.

மணி பத்து ஆகப் போகிறது.

ரஞ்சனிக்குத் ‘திக்’கென்றது. பாபுவைக் காணோமே!---பெற்ற மனம் பித்து; ஆனால், பிள்ளை பாபுவின் மனம் கல்லா என்ன? சூன்யத்தில் ஆளுகின்றவனை நம்புபவள் அவள்: கை குவிக்கிறாள்: கண்கள் குவிகின்றன. எப்படியோ, மகளின் பக்கத்தில் வந்து நின்றிருக்கிறாள். ஸ்லிப்பர்களில் தடுமாறியவள் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் முகத்தில் ஈயாடவில்லை; எதிரில் நின்ற கண்ணாடியிலிருந்து விலகி நின்றாள்.

ஆனால், நந்தினியின் பவுடர் வதனத்தில் ஈக்கள் ஆடின. அவை, விலக்கி வைக்கப்பட்டிருந்த இட்டிலிகளைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்திருக்கலாம்.

47