பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நந்தினி...”

“....”

“நந்தினி! - ஒருதரம், ரெண்டு தரம், மூணு தரம்...!”

அவ்வளவுதான்.

மறு இமைப்பில்...

கோபக் கனல் தெறித்திட வந்து நின்ற ரஞ்சனியின் கழலடியில் நெடுஞ்சாண்கிடையாக வந்து வீழ்ந்த நந்தினி, “தாயே! நான் உங்களோட மகள்தானே?...உங்க அன்பான கணவரோட பொண்ணுதானே நான்?...ம்...சொல்லுங்க!ஒன்...டு...த்ரீ!...” என்று ஓலம் பரப்பினாள்.

பெற்ற மகளின் உணர்ச்சிகள் இப்படிக் கிளர்ச்சி செய்யுமென்று பெற்ற அன்னை சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது. நெஞ்சு பதை பதைத்தது. “நந்தினி, நீ எங்களோட மகளேதாண்டி, தாயே!” என்று விம்மி வெடித்தவளாக, நந்தினியின் இரண்டு கைகளையும் பற்றிப் பிடித்துத் தூக்கியெடுத்து, அவள் விளையாடிய மார்பகத்தில் அவள் முகத்தைப் பதித்து அணைத்துக்கொண்டாள் ரஞ்சனி.

பாசத்திற்குச் சிறை புகத் தெரிவதுபோலவே, விடுதலை பெறவும் தெரியுமோ?

“அம்மா...அம்மா...நான் செத்துப் பிழைச்சிட்டேனே. அம்மா!” என்று அந்த நாளில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பானே பாபு, அப்படிக் குதித்துக் கும்மாளம் போட்டாள் அந்தப்பெண். அத்துடன் திருப்தி அடையாமல், தாய்க்குக் கன்னத்துக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு முத்தங்களையும் வழங்கினாள்.

ரஞ்சனியின் மேனி புல்லரிக்கிறது. பாபுவின் முத்தம் கிடைத்து எத்தனை வருஷம் ஆகிவிட்டது?-பரிதாபமாகச்

48