பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தமிழுக்கு மீண்டும் நன்றி

⬤ இலக்கியச் சுவை ததும்பப் பிறந்திருக்கிறது, இந்த 1982 ஆம் ஆண்டு:- முப்பது ஆண்டுகளுக்கும் கூடுதலான என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் உறுதுணையாக இருந்து வருகின்ற நல்ல தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் உண்மையான ஆர்வலர்களாகிய உங்கட்கெல்லாம் புதிதான, தரமான , சுவையான, பண்பான, வித்தியாசமான ஓர் இலக்கியப் படையலை அன்பு தழுவிய விருந்தாக மீண்டும் படைத்திட நல்வாய்ப்புத் தற்போது எனக்கு வசதியாகவே ஏற்பட்டு விட்டது அல்லவா?-- இந்த ‘அந்தி நிலாச் சதுரங்கம்’ உங்கள் சிந்தனைகளை நிச்சயம் தூண்டும்!-எழுதுங்களேன்!

⬤ கேரள வாசத்தில், என் வரையிலும் ஒரு தேக்கம் ஏற்பட்டதென்னவோ உண்மைதான்!-ஆனாலும், பின்னர் தமிழ் மண்ணுக்குத் திரும்பியதும், என் உற்சாகம் புத்துயிர் பெறத் தொடங்கியது; நூல்கள் சிலவற்றை வெளிப்படுத்தினேன். அவற்றில், ‘இதோ. ஒரு சீதாப் பிராட்டி’ என்னும் நாடக நூலும், ‘தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?’ என்கிற கதைக் கொத்தும் இவ்வாண்டில் தமிழக அரசின் முதற் பரிசைப் பெற்றிருக்கின்றன. 1966ல் என்னுடைய ‘பூவையின் கதைகள்’ தமிழக அரசின் முதற் பரிசினைப் பெற்ற சேதியை நீங்கள் எப்படி மறக்க முடியும்?

⬤ எனக்கு மற்றுமொரு சடையப்பர் கிட்டிவிட்டார்!

⬤ எல்லோருக்கும் தூய்மையான, நன்றியறிவுமிக்க என்னுடைய வணக்கத்தை அன்போடும் பண்போடும் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

ஏலக்காய் வாரியம்

சென்னை-600 018

பூவை எஸ். ஆறுமுகம்

19-6-1982