பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவரையும் அறியாமல், அவருடைய தலை குனிந்தது; தாழ்ந்தது; பிறகு, பாபுவின் கட்டிலில் முழங்கைகள் இரண்டையும் பரப்பிக் கொண்டு, தன்னுடைய முகத்தைப் பால் வழியும் பாபுவின் முகத்துக்கு நேராகச் சாய்த்தபடி, பாபுவைப் பார்த்தார்; பார்த்தார்; அப்படிப் பார்த்தார்!- பாதைமாறி உதிர்ந்த ஒரு சுடர் முத்து, சொல்லி வைத்தது. போல, அந்தப் பாலகனின் கள்ளம் கவடு அறியாத நிர்மலமான முகத்தில், இடது கன்னத்தின் கறுப்புப் புள்ளி மருவில் உதிர்ந்ததைக் கண்டதும், திடுக்கிட்டார்: நல்ல காலம், பாபு விழித்துக் கொள்ளவில்லை!-அவர் இப்போது தன்னுடைய இடது கன்னத்தின் அவலமான கரும் புள்ளிப் பரப்பை தடுங்கும் விரல்களால் தடவிக் கொள்ளத் தொடங்கினார்; நெஞ்சு விம்மத் தொடங்கியது.

கடிகாரத்திற்கும் இதயம் உண்டுதான்!

"பா. . பு!"

ஊகூம்!

பாபு உசும்பவே இல்லை!

“என்ன தீவினையோ? வினை தீர்க்கும் ஆறுமுகப் பெருமானே!-வினையை விதைப்பது உண்டா, என்ன? - என்னவோ, வினையை அறுவடை செய்வது போலவே, அவருள் ஏதோ ஒன்று சீறி அவருக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டேயிருக்கிறது!- ஏமாற்றத்தில் அறுப்புச் செய்யப் பட்ட ஏக்கத்தில், அவர் பாபுவின் தனிமையான அறையினின்றும் வெளியேறினார். அங்கே திருவாளர் ரஞ்சித் தவியாய்த் தவித்துக் காத்துக் கொண்டிருப்பாரே...? போய்விடவேண்டும்!

குயில் ஒன்று கூவிக்கொண்டிருக்கின்றது. அழகாகவும் உருக்கமாகவும் கூவிக் கொண்டிருக்கிறது!-அதற்கு என்ன காதல் சிக்கலோ?

89