உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேஷ் எதை நினைப்பாராம்?

அவர் எதைத்தான் மறப்பார்?

நினைப்பதற்காகவும் மறப்பதற்காகவும்தான் , ஆண்டவன் மனிதனைப் படைத்து, அவனோடு விளையாடிக் கொண்டிருக்கிறானா?

விதியோடு விளையாடத்தான் மகேஷு-க்குப் பொழுது சரியாகி விடுகிறது.

பின், மகேஷோடு விளையாடுவதற்கு ஆண்டவனால் எப்படி இயலும்?

“தெய்வமே!” என்று அங்கிருந்து நகர்ந்தார் மகேஷ். பின்கட்டில், ரஞ்சனி கோபத்தோடு எடுபிடிக் குட்டியைத் திட்டிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. ரஞ்சனியின் கோபத்தை அவர் அறியாதவரல்லவே! - சுள்-சுள்’ ளென்று கோபம் வந்துவிடும்; “ஜல்-ஜல் லென்று வந்த கோபம போய்விடுவதும் உண்டுதான்!-ஏதோ ஒர் உறுத்தல் மண் புழுவாகக் குடைகிறது: அரிக்கிறது; நச்சரிக்கிறது. ரஞ்சனியை நினைக்க முயன்றார், ஆனால், தோன்றியவளோ ரதி!-ஒ!...ரதி!-என் ரதி ரதிக்கு எல்லாக் கதையுமே தெரியும்!-செய்த பாவம் போதாதா?-ஆகவே, அவர் அவளிடம் எதையும் மறைக்கவும் விரும்பவில்லை; மறைத்து வைக்கவும் துணியவில்லை. மனத்தின் நீதிபதியின் கட்டளை அது. இனிமேலும் இங்கு தாமதிப்பது அநாகரிகம். ரஞ்சித்தைச் சோதித்துவிடுவதென்பது லேசான காரியம் அல்ல. கண்ணாடி, ஜன்னலில் தரிசனம் தந்த வெம்மை நிரம்பின வெளி உலகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது, அவரது நெஞ்சத்தின் நெஞ்சத்தில், அந்தப் பயங்கரச் சோக நிகழ்ச்சி-ஓர் அந்திமாலையில் நடந்து முடிந்து விட்ட அந்தப் பயங்கரச் சோக நிகழ்ச்சி கருநாகமெனச் சீறிப் படம் எடுத்துப் படம் காட்ட எத்தனம் செய்தது.

91