பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

113


“கன்யா!.. ஆனால். மன்னர் சாமான்யரல்லர் என்பதை நாம் மறந்துவிடுவது சரியல்ல. அவர் அரசியல் சூழ்ச்சியில் மாமேதை. ஒருக்கால், நாதசுரபி எதிரியின் கைப்பாவையாக இருந்து விட்டிருந்தால் என் செய்வது என்ற எச்சரிக்கையுடன் தான், அவரும் அவளைக் கண்காணிக்க ரகசிய ஆட்களை நியமனம் செய்திருக்கிறார். இன்றுவரை அவளைச் சந்தேகப்படுவதற்கான தடயம் ஒன்றுகூட–ஒன்றின் சாயல்கூட எழவில்லை; நிகழவுமில்லை. வருமுன் காவாதான் வாழ்வின் கதியைத் தமிழ்மறை புகலவில்லையா?...”

அவர் இப்பொழுது நல்லமூச்சு விடலானார்.

இளவரசியும் அமைதியுடன் முறுவல் பூத்தாள். “உங்கள் உரை எனக்கு மிகுந்த அமைதியைத் தருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் பொன்னான காலத்தில் குறுக்கிட்டதற்காகப் பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!” என்று சம்பிரதாயப் பாவனை மிளிரச் சொல்லிவிட்டு, “வேழநாட்டின் மீது எப்போது படையெடுக்க உத்தேசம்?” என்று வினா விடுத்தாள் இளவரசி.

“இளவரசி மன்னிக்க வேண்டும். அது பற்றி நீங்கள் என்னிடம் கேட்டிருக்கக் கூடாது!...” குனிந்த தலையை நிமிர்த்தாமல் கடமைப் பண்புடன் சொன்னார் முதல்மந்திரி.

“ஓஹோ!...சரிதான்! நீங்கள், எங்கள் அரண்மனைக்கு அல்ல, எங்கள் சிருங்காரபுரி நாட்டுக்குத் தலைமை அமைச்சராகக் கிட்டியது எங்கள் நாட்டின் மாபெரும் அதிர்ஷ்டமேயாகும்! உங்களைப் பற்றி அப்பாவுக்கு மிகவும் உயர்ந்த அபிப்பிராயம்!... ஆமாம், உங்கள் புதல்வியின் திருமணம் எப்போது நடக்கப் போகிறது?....”

“போர் முடிந்ததும், இளவரசியாரின் திருமண ஏற்பாடுதான் அடுத்த கட்டம். அதன் பின்தான் என் மகளைப் பற்றி என்னால் கவலை கொள்ள முடியும்!...”