பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

இளவரசி வாழ்க



விஜயேந்திரனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள் கன்யாகுமரி!

இரு தரப்புப் படைகளும் இந்த எதிர்பாராத முடிவின் திருப்பத்தில் வாய் அடைத்து நின்றனர்.

“அம்மா!”

கன்யாகுமரி விசை பாய்ச்சித் திரும்பினாள்.

அங்கே –

முதுகில் பாய்ந்த வாளுடன் நாதசுரபி தரையில் சாய்ந்து கிடந்தாள் “இளவரசி என்னைப் பற்றி நீங்கள் தொடக்கத்திலேயே சந்தேகப்பட்டீர்கள். அது சரியே! நான் வேழ நாட்டின் வேவுகாரியாகத்தான் உங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டேன். ஆனால், இளவரசுக் குழந்தை என்னைப் பைத்தியமாக்கியது. நான் அதன் அடிமையானேன். இந்நிலை அறிந்து, வேழ நாட்டரசர்–இந்த விஜயேந்திரன் எனக்கு அவப்பெயர் சூழச் செய்யவே, குழந்தையை ஆள் வைத்து எடுத்துச் செல்லச் செய்து விட்டிருக்கிறார். குழந்தை இல்லாமல் அங்கு வர முடியாதென்று எண்ணி, வேழநாடு சென்றேன். அபகரித்து வந்த குழந்தையை யாரோ வழிமறித்துப் பறித்துச் சென்று விட்டார்களாம்!... என்னால் நம்ப முடியவில்லை!...என் வஞ்சனைக்கு வேழ நாட்டான் யாரோ ஒருவன் பரிசளித்தான். வேழ நாட்டரசனின் வஞ்சனைக்கு, நானும் அவருக்கு பரிசு கொடுக்க வேண்டாமா, கொடுத்து விட்டேன்!. அம்மா! என்னை மன்னியுங்கள்! என் கூத்து முடிந்து விட்டது!...”

நாதசுரபியின் விழிகள் நீருடன் மூடின, எதிர்பாராத வகையில்!

இளவரசி என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் நாதசுரபியின் வாழ்வு, கதையாக முடிந்துவிட்டதே!