பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

இளவரசி வாழ்க



பாசறையின் ஒய்வுமனையில் வேழ நாட்டரசன் விஜயேந்திரன் இடம் பெற்றான். புண் வலி லேசாகக் கட்டுப்பட்டது. நித்திரை வசப்பட்டான்.

“இதோ வருகிறேன்!” என்று விளித்து விட்டுக் குதிரையில் ஏறினாள் இளவரசி கன்யாகுமரி.

அரைநாழிப் பொழுது அமைதிப் புலரியில் கழிந்தது.

அப்போது–

அன்றொரு நாள் சிருங்காரபுரி நாட்டின் அரண்மனையில் வித்தையாடிக் கிழவன் ஒருவன் வந்தானே, அவன் அங்கு சுற்றுமுற்றும் விழித்தபடி நின்றான்!

அதற்குள், “இதோ இவன்தான் மன்னர்பிரானின் குழந்தையை என்னிடமிருந்து ஏமாற்றிப் பறித்தவன்” என்று ஓடிவந்த வேழநாட்டுச் சிப்பாய் அக்கிழவனை உடும்புப் பிடியாகப் பற்றினான்.

மாமன்னர் பூபேந்திர பூபதி எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அவர் கை இடுப்பிலிருந்த குத்துவாளை எடுத்தது.

அதற்குள், வித்தையாடிக் கிழவன் மேலங்கியால் மறைத்து வைத்திருந்த இளவரசனை மன்னர் பெருந்தகையாம் பூபேந்திரபூதியிடம் சமர்ப்பித்தான் “ம்!...இனி என்னைத் தாராளமாக் குத்துங்கள் எதிரியரிடமிருந்து உங்கள் குழவித் தங்கத்தை நான் காப்பாற்றியதற்கு உங்கள் பரிசு இதுவென்றால், அதை ஏற்க நான் கடமைப்பட்டவனில்லையா?....ம்.எடுத்த கத்தியை உறையில் போடக்கூடாது ஊம்!..” என்று விம்மலானான் வித்தையாடிக் கிழவன்.

மாமன்னர் விழியில் நீர் சோர, “என்னை மன்னியுங்கள். ஆத்திரம் என் அறிவைச் சிறுநேரம் மறைத்து விட்டது” என்று கெஞ்சிக் கை கூப்பினார்.