பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

427


என் அருமை மகள் இளவரசி கன்யாகுமரி என்ன பதிலிறுத்தாள் தெரியுமா?– ‘உங்களுக்குக் கட்டுப்பட்டுக் கப்பம் கட்டுவதால், வேழநாட்டின் அரசனின் கவுரவம் பாழ்பட்டதாக அவர் பொன்மனம் நோகாதா?' என்று என்னையே எதிர்த்துக் கேட்டாள். அவளுடைய மனித நேயம் மிகுந்த அந்தப் பேச்சு, அவள் உங்கள்மீது கொண்டிருந்த அளப்பரிய பாசத்தையும் நேசத்தையும் சுட்டிக்காட்டி விட்டதே?....என் மனமும் திறந்தது; என் கண்களும் திறந்தன!.. ஆகவேதான், நீங்கள் இருவருமே நடக்காத இந்தப் போரிலே வெற்றி பெற்றுவிட்டதாகத் தீர்ப்புக் கூறினேன்!...”

சிலகணங்கள் மெளனம் காத்தபின், சிருங்காரபுரி மாமன்னர் பூபேந்திர பூபதி மனம் திறந்து திரும்பவும் பேசலானர்:

“அருமைத் திருமகளே, கன்யா!... நான் மண்ணை நேசித்தேன்; நீயோ, மண்ணை நேசித்ததுடன், மனிதர்களையும் நேசித்தாய்! அதைவிடவும், சிறப்பாகப் பகைவனையும் நேசிக்கத் தலைப்பட்டாய்! அந்த ஒப்பற்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் உனக்கு ஒப்புயர்வற்ற ராஜகிரீடத்தைச் சூட்டிவிட்டனவே!.. நான் புதுப்பிறவி எடுத்துவிட்டேன், இப்போது!... நடக்காத இந்தப் போரிலே, இருவருமே வெற்றி பெற்றுவிட்டீர்கள் அல்லவா? – ஆகவே, விரைவிலேயே உங்கள் இருவருக்கும் சிருங்காரபுரி நாட்டின் இளவரசுக் குழந்தை புடை சூழ்ந்திடத் திருமணம் செய்துவைக்கப் போகிறேன்!... 'ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்னும் அற்புதத் தத்துவம் உயிர் வாழ்ந்திட, என் எஞ்சிய நாட்களையும் கழிப்பேன்!...என் இலட்சியக் கனவு, வருங்காலத்தில் முழு வீச்சுடன் செயற்படுமெனவும் நான் நம்புகிறேன்!...என்னை நம்புவீர்களா, விஜயேந்திர மன்னரே!... அருமைத் திருமகளே, கன்யா!.உன் தந்தையை நம்புவாயா?...”

கண்ணீர்த்துளிகள் விளையாடின.

“மன்னர் பிரானே ! நீங்கள் மகத்தான மாமன்னர்! நான் மட்டுமல்ல, உங்கள் தெய்வத் திருமகளும் பாக்கியம் செய்தவளே!” என்றார், வேழநாட்டு அரசர் விஜயேந்திரன்; ஆனந்தக்கண்ணிர் ஆனந்தமாகச் சிரித்தது!