பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

19


அது கை நழுவிப் போச்சு, இப்போ என்னைப் பெற்றவங்களும் என்னைக் கை கழுவிப்பிட்டாங்க. சத்தியமாகச் சொல்றேன்; நான் சாகத் துணிஞ்சிட்டேன்!”

“பூபாலா, உன்னிடம் அடைக்கலமடைந்திருக்கும் அந்த நெஞ்சுரத்திற்காகவேதான் தம்பி உன்னை என் கம்பெனியில் அமர்த்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“வாஸ்தவம் சார். உங்கள் ஆசைக்குக் காரணம் எனக்குப் புரியாமலா போயிடும்? என்னைக் கொண்டு பணம் பண்ணத்தான் நீங்க கோட்டை கட்டுறீங்க, இல்லையா...?”

“இல்லை, தம்பி. உன்னைக் கொண்டுதானா எனக்குப் பணம் கிடைக்கவேணும்? உன் அப்பாவை இப்போது அவர் வேலை செய்யும் தொழிற்சாலையிலே சேர்த்துவிட்டது நான்தான். அந்த நன்றியில்தான் உன்னை என்னிடம் சேர்ப்பித்துச் சென்றிருக்கிறார் அவர் நினைவு வைத்துக்கொள் அப்பனே!”

“ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. என் நிலையிலே உங்கள் மகள் அல்லி அகப்பட்டுத் திண்டாடினால் என்ன பாடுபடும் உங்கள் மனசு? நினைச்சுப் பார்த்து, என்னை விட்டு விடுங்கள்.. சார், என் நாய்க்குட்டியைக் காணாமல் ஒரு நிமிஷம் கூட என்னாலே தங்க முடியாது!” என்று கண்ணீரைத் தாரை வார்த்துக் கெஞ்சினான் பூபாலன்.

சர்க்கஸ் மாஸ்டர் இம்முறை வாய் திறக்கவில்லை. அருகிலிருந்த பொத்தானை இடது கை நுனி விரலால் அழுத்தினார். சிறுத்தை பயங்கரமாக உறுமிக் கொண்டு அவன் மீது பாய்ந்தது.

“ஐயோ!” என்று கூக்குரலெழுப்பினான் பூபாலன். அவனுடைய தலை சுற்றியது.