பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 அந்த நாய்க்குட்டி எங்கே?



“இந்தக் குருட்டு இருட்டிலா நீ வெளியேறப் போகிறாய், தம்பி?”

“என்னுடைய அருமை நாய்க்குட்டி மூன்றாம் தவணையாக என்னை விட்டுப் பிரிஞ்சபோதே என் கண்கள் குருடாகிடுச்சு; உலகம் இருட்டாகிப் போச்சு. பயங்கரமான இந்தக் குகை எனக்கு ஒரு பொருட்டல்ல!”

“பூபாலன், உன் அழுகையை நிறுத்தச் சொல்லி இந்த மூன்று நாட்களாகக் கெஞ்சினேன். இந்த வேண்டுகோளுக்கா இவ்வளவு வியாக்யானம்? இதோ பார், முதலாவதாக நீ உன் கண்ணீர் வெள்ளத்துக்கு அணை போட்டாக வேணும். இரண்டாவதாக நீ சிரிக்க வேணும்,” என்றான் அந்த மனிதன். அவனுடைய விரல்கள் பூபாலனின் கன்னத்தில் இழைந்திருந்த கண்ணிர் முத்துகளை வருடி விலக்கி விட்டன.

பூபாலன் திமிறிக் கொண்டு விலகினான். தன்னை மறந்த நிலையில் விர்ரென்று பாய்ந்து ஓடினான். எங்கு பார்த்தாலும் பாறைச் சுவர்கள் நந்தியாக வழி மறைத்து நின்றன. ஆத்திரம் தாளவில்லை; வெறி தாளவில்லை. அழுகை மூண்டது; வேதனை மூண்டது. “ஐயோ, என் நாய்க்குட்டி ?” என்று கதறியவனாக, பாறையில் படார், படார் என்று தலையை மோதிக் கொண்டான். ரத்தம் ஊற்றெடுத்தது. மயங்கிக் கீழே சாயப் போனான் பூபாலன்.

அப்பொழுது–

“ஐயோ, பூபாலா!” என்ற குரல் முன்னோடிச் சென்றது. அடுத்து, ஒரு சிறுமி பாய்ந்து சென்றாள். தரையில் விழுந்திருந்தவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கீழே அமர்ந்தாள். சிறுமியின் அன்பு மடியில் சிறுவன் தன் நினைவைக் கொள்ளை கொடுத்து விட்டுக் கிடந்தான்.

ஒரு நாழிகைப் பொழுது கழித்திருக்கும்.

பூபாலன் கண்களைத் துடைத்துக் கொண்டான்; கண் மலர்கள் விரிந்தன. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். கை நீட்டும் தொலைவில் கிடந்த ஒரு பழைய காகிதக் கிழிசலை அவசர