பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மாஸ்டர் உமைபாலன்



‘ஒவ்வொரு பேச்சையும் எவ்வளவு தூரம் சிந்தனை பண்ணிப் பேசுகிறான் இச்சிறுவன்!’ கோபுவுக்கு அதிசயம் அடங்க வில்லை.

“தம்பி! இப்போதைக்கு நீ எடுபிடி வேலை செய்துக்கிட்டு இரு. போகப் போக, பின்னாடி வேறே நல்லதா ஏற்பாடு செய்யிறேன்!”

“ரொம்பப் புண்ணியமுங்க”

“சம்பளம், சாப்பாடு போட்டு அஞ்சு ரூபாதான் தரமுடியும்!"

“சரிங்க! எல்லாம் உங்க தயவுங்க!”

கோபு வாசலுக்கு விரைந்தான்.

உமைபாலன் அவனைப் பின்தொடர்ந்து திரும்பிய நேரத்தில், கிட்டங்கிப் பையன் விரல்களை இணைத்துத் தட்டி அழைத்தான். “அண்ணாச்சி புதுசு போல!” என்று மெல்லப் பேச்சுக் கொடுத்தான். அவன் கழுத்தில் சிலுவைச் சின்னம் அழகு காட்டிக் கிடந்தது.

உமைபாலன் ‘ம்’ கொட்டிவிட்டு, ரவை நேரமும் தாமதிக்காமல் தன்னுடைய கடமைகளைச் செய்யவேண்டிப் புறப்பட்டான்.

ஹாலில் ஒரு முடுக்கில் கிடந்த அழுக்குத் துணியை எடுத்துக் கொண்டு மேஜைகளைச் சுத்தம் செய்யலானான், உமைபாலன்.

வேலை முடிந்த கையுடன், அவனுக்குக் காலைச் சிற்றுண்டி கிடைத்தது. கலங்கி வந்த கண்களை மூன்றாம் பேருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான். இட்டிலிகளைச் சாப்பிட்டான். தொண்டையை அடைத்தது. சமாளித்துக் கொண்டான். தண்ணீர் குடித்தான். சாப்பிட்டு முடித்ததும், தன்னுடைய ட்ரவுசர் பையிலிருந்த அந்தச் செய்தித்தாளை மீண்டும் ஒரு தரம் பார்க்க வேண்டுமென்கிற துடிப்பு வலுவடைந்தது!