பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ்.ஆறுமுகம்

85



அப்போது –

வாசலில் ஒரு கூச்சல் கேட்டது.

எல்லோரும் வெளியே ஒடி வந்தார்கள்.

பிச்சைக்காரச் சிறுமி பூவழகி பதற்றத்துடன் கதறினாள்: “ஐயையோ, ஓடியாங்க!... ஓடியாங்க! திருடன் இந்தக் குழந்தையோட நகைகளைக் கழற்றுகிறானே?”

எல்லோரையும் முந்திக்கொண்டு உமைபாலன் ஓடினான்.

அழகான அப்பெண் குழந்தையின் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருந்தான் ஒரு திருடன் !

யார் அவன்?

கிழவன் சாம்பானல்லவா அவன்?

ஒடிச் சென்ற உமைபாலன் குழந்தையைக் கண்டு பதறி, “ஆ!"என்று அலறினான். கழுத்துச்சங்கிலியைக் கழற்ற முனைந்த கிழவனைக் கீழே பிடித்துத் தள்ளினான்.

பூவழகி கதறினாள்.

கனபாடி கங்காதரமும் அவர் பிள்ளை கோபுவும் ஓடி வந்தார்கள். கிழவன் சாம்பானைக் கண்டதும் ஐயர் திகைப்புற்றார். “சரிதான்... இந்த அப்பன் புத்திதான் மகனுக்கும் வந்திருக்குது!...” என்று பற்களைக் கடித்தார். பற்கள் சில எப்படியோ, யார் செய்த பூஜாபலன் மூலமோ அவர் வசம் எஞ்சின.

கிழவன் சாம்பான் தலைமுடியை முடிந்தான்; “டேய்...நீ யாருடா என்னைத் தடுக்க!. இது யார் குழந்தையோ இதிலே நீ ஏண்டா தலையிடுறே...? போடா!...” என்று சீறினான் அவன்.