பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

மாஸ்டர் உமையாலன்



பதறினார் செங்காளியப்பன். “நீ எங்களுக்குக் கிடைச்சதே பெரிய பாக்கியம் அப்பா! உனக்காக நாங்கள் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாதப்பா!... நடந்ததையெல்லாம் மறந்திடு. இனி நான் உன் மனசு கோணாம நடப்பேன், தம்பி!...” என்று பாசத்துடன் சொன்னாள் அவனது சின்னம்மா.

“அம்மா!” என்று விம்மினான் உமைபாலன். அவன் தன்னுடைய அன்புச் சிற்றன்னையின் பாசப்பிடிப்பில் கட்டுண்டு கிடந்தான்.

ஏழைச் சாம்பானிடம் மன்னிப்பு வேண்டினார் கனபாடி, “உம் பையனைப் புதுப் பையனாகத் திருத்திக் கொண்டு வந்து சேரும்” என்றார் கண்டிப்புடன்!

மகனுடன் ஊருக்குப் புறப்படுவதற்கு உத்தரவு கோரினார் செங்காளியப்பன். ஆஹா, அவரது முகத்தில்தான் எத்துணைக் களிப்பு! எத்துணை நிறைவு!

உடனே, உமைபாலன் வேலை செய்த நாட்களைக் கணக்கிட்டு, அதற்குரிய சம்பளத்தை உறையிலிட்டு நீட்டினார் ஐயர்.

“பணம் இருக்கட்டும். நான் இந்தப் புதிய உலகத்திலேருந்து படிச்சுக்கிட வேண்டியது ரொம்ப இருக்கு. நான் இங்கேயேதான் இருப்பேன்!″ என்றான் உமைபாலன். வெறுங்கையுடன் வீட்டைத் துறந்து புறப்பட்ட அவனுக்கு நடந்த சம்பவங்கள் மீண்டும் மனத்தில் தோன்றின.

காரைக்கால் அன்பர் மீண்டும் கலவரம் அடைந்தார். அவர் ஐயரைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.

“தம்பி இத்தனை வயசிலே நான் இதுவரை அறிஞ்சிராத இரண்டு அதிசயங்களை இங்கே கண்டேன். பணக்காரப் பிள்ளையான நீ அனாதை ஏழைப் பிள்ளையாய் நடிச்சே. ஆனா, அந்தப் பையன் ஜெயராஜோ ஏழையாய் இருந்து, மனசைப் பெருக்காமல்