பக்கம்:அனிச்ச மலர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105

 காஷ்மீரில் எடுக்கப் போகிற படப்பிடிப்பில் தனக்கு என்ன வேலை இருக்கிறது என்ற தெரிந்து கொள்வதற்காகச் சுமதி மேரியை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தாள்.

“வேலை எல்லாம் அங்கே புறப்பட்டுப் போனால் தானே வரும். ஒரு யூனிட்டா எல்லாரும் புறப்பட்டுப் போறாங்க - கன்னையா நம்மையும் கூப்பிடறாரு. அலுங்காம ப்ளேன்ல போகப்போறோம்” என்று பதில் சொல்லி பூசி மெழுகிவிட்டாள் மேரி.

அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லிவிட்டுக் காஷ்மீர் புறப்பட்டுப் போவது சுமதியின் மனத்தை உறுத்தினாலும் ஆசைதான் வென்றது. பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதால் அவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை வேறு தூண்டியது. சுமதி காஷ்மீர் போவதற்கு முன் பல மாலை வேளைகளில் ’டான்ஸ்’ கிளாஸுக்கு வேறு போய் வந்தாள். அவள் நடனம் கற்கும்போது தயாரிப்பாளர் கன்னையாவே கூட இருந்து அவளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்.

"மாஸ்டர்! இவளுக்கு எல்லா டான்ஸும் கத்துக் குடுத்துடுங்க. பரத நாட்டியம், மணிபுரி, கதக், காபரே எல்லாம் தெரிஞ்சாத்தான் சினிஃபீல்டிலே உபயோகமா இருக்கும்” என்று கன்னையா டான்ஸ் மாஸ்டரிடம் சொல்லி வைத்தார்.

"கொஞ்சங்கூடக் கவலைப்படாதீங்க புரொட்யூஸர் சார். இவளுக்கு எதைக் கத்துக் குடுத்தாலும் பிரமாதமா வரும் ஜமாய்ச்சுப்பிடலாம்” என்றார் மாஸ்டர்.

காஷ்மீர் புறப்படுவதற்கு முந்தியதினம் பட்டுப் புடவைகள் செலக்க்ஷனுக்காகத் தயாரிப்பாளர் ஜவுளிக்கடைக்கு போகப் போவதாகவும், சுமதியும் வரவேண்டும் என்றும் மேரி வந்து கூப்பிட்டாள். சுமதியால் மறுக்கமுடியவில்லை. பாண்டிபஜாரில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடையில் போய் பட்டுப்புடவை வாங்கி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/107&oldid=1132118" இலிருந்து மீள்விக்கப்பட்டது