பக்கம்:அனிச்ச மலர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

109

 கூட ரெண்டு நாள்தான் இருப்போமே?” என்றாள் மேரி. சுமதிக்கு மட்டும் பயமாகவே இருந்தது. ஊரில் என்னென்ன பேசிக் கொள்வார்களோ, என்னென்ன நடக்குமோ என்றெல்லாம் தயக்கம் இருந்தது; மனமும் குழம்பியது.

காஷ்மீர் என்ற பூலோக சுவர்க்கத்தின் அனுபவங்களும், அழகும் மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தாலும் நடு நடுவே வார்டனும், அம்மாவும் ஞாபகம் வந்து சுமதியைப் பயமுறுத்தினார்கள்.

காஷ்மீரச் சாலைகளில் எல்லாம் குடையை மடக்கிக் கவிழ்த்ததுபோன்ற உயரமான பச்சை மரங்களும், குங்குமப் பூ வயல்களும், ஏரிகளும், மலைச்சிகரங்களுமாக அந்தப் பிரதேசம் எழில் களஞ்சியமாக இருந்தது. ஏரிகளில் மிதக்கும் படகு வீடுகளில் ஒன்றில் தங்குவதற்குக் கன்னையா ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

"யூனிட்டிலே இருக்கிற அத்தினி பேருக்கும் படகுவீடு ஏற்பாடு பண்றதுன்னா நான் போண்டியாயிடுவேன், நீயும், நானும், மேரியும் மட்டும் ரெண்டு நாள் படகு வீட்டிலே தங்கலாம்"-என்றார் தயாரிப்பாளர். ஹோட்டலில் தங்கும் போதே ஒரு விஷயம் சுமதிக்கு புரியாத புதிராயிருந்தது. தயாரிப்பாளர் தனியாக ஒரு லக்சுரி அறையில் தங்கியிருந்தார். அதே வரிசையில் இருவர் தங்க முடிந்த ஒர் அறையில் சுமதியும், மேரியும் தங்கியிருந்தார்கள். மற்றவர்கள் வேறு வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். பகலிலும் நள்ளிரவிலும் திடீரென்று மேரி சுமதியைத் தனியே விட்டு விட்டுத் தயாரிப்பாளரின் அறைக்குப் போய் விடுவாள். சில இரவுகளில் சுமதியைத் தனியே விட்டுச் சென்றவள் விடிகாலையில்தான் மறுபடி அறைக்கே திரும்பியிருக்கிறாள். அப்படி இரவுகளில் எல்லாம் பயத்தினாலும், புது ஊரில் புது இடத்தில் தனியாகவும் படுத்திருக்கிறோமே என்ற தனிமை உணர்வினாலும் உறக்கமே வராமல் சுமதி தவித்தது உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/111&oldid=1131745" இலிருந்து மீள்விக்கப்பட்டது