பக்கம்:அனிச்ச மலர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113

 கொண்டுவிடலாமா என்றுகூட அவள் அப்போது எண்ணினாள். அவளுடைய கதறலும் அழுகையும்கூடத் தயாரிப்பாளர் கன்னையாவை எழுப்பி விடவில்லை. வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சியைத் தின்று விட்டுத் துங்கும் வேடனைப்போல் கன்னையா அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தார். படகு வீட்டின் மரச்சுவரில் தலையை முட்டி மோதிக் கொண்டு கதறி அழுதாள் சுமதி. சத்தம் கேட்டோ தற்செயலாகவோ மேரி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கவில்லை. மேரியை அப்படியே பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. ஆனால் அப்படிச் செய்யவும் முடியாமல் பிரமை பிடித்தவள்போல் நின்றுவிட்டாள் அவள். மேரியோ, "ஒண்ணும் கவலைப்படாதே ! யாருக்கும் தெரியாது. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று சுமதியிடம் ஒரு சிறிதும் பதறாமல் சொன்னாள்.

16

சுமதியால் நடந்து விட்டதை மறுபடி நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் இருந்தது. தான் இழந்தது எத்தனை பெரிய விஷயம் என்பது ஞாபகம் வருகிற போதெல்லாம் அவள் உடல் நடுங்கியது. தன்மேல் தானே அறுவறுப்பு அடைந்தாள் அவள். தன்னைச் சமாதானப் படுத்த வந்த மேரியின் மேல் எரிந்து விழுந்தாள் சுமதி. சப்தம் கேட்டுக் கன்னையாவும் படுக்கையிலிருந்து உறக்கம் கலைந்து எழுந்திருந்து வந்தார். ஹிஸ்டீரியா வந்ததுபோல மேரியின் மேலும் கன்னையா மேலும் சீறிப் பாய்ந்து அறையவும், கைகளை மடக்கிக் கொண்டு முஷ்டியால் குத்தவும் தொடங்கினாள் அவள். உள்ளே கலவரம் கேட்டு 'கேர் டேக்கர்' போல அந்தப் படகு வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஓர் காஷ்மீர் ஆள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான்.

மேரி விரைந்து சென்று அவனைப் போகச் சொல்லி ஆங்கிலத்தில் வேண்டிக் கதவைத் தாழிட்டுக் கொண்டு

அ.ம-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/115&oldid=1146923" இலிருந்து மீள்விக்கப்பட்டது