பக்கம்:அனிச்ச மலர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அனிச்ச மலர்


சுமதிக்கும் திடீரென்று ஆத்திரமும் ரோஷமும் வந்திருக்க வேண்டும். அவள் வார்டனின் அறையிலிருந்து வெளியேறிக் கீழே வராந்தாவிலிருந்து காசு போட்டுப் பேசும் ஃபோனில் போய் மேரியோடு பேசினாள். நடந்ததைச் சொன்னாள்.

"அப்படியா சங்கதி? நீ ஒண்ணும் அலட்டிக்காதே, மறுபடியும் ஒரு டாக்ஸி வச்சுக்கிட்டு நேரே இங்கே வா. அல்லது புரொட்யூஸர் கன்னையா வீட்டிலே போய் இரு. நான் அங்கே வந்துடறேன்”- என்றாள் மேரி.

சுமதி ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ஒரு ரூபாயைக் கையில் திணித்து மறுபடி அவன் உதவியுடனேயே பெட்டி சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வாசலிலேயே டாக்ஸி ஸ்டாண்டு இருந்ததனால் அவள் வந்து இறங்கிய அதே டாக்ஸியே அங்கு இன்னும் நின்றிருந்தது. டாக்ஸியில் ஏறிக்கொண்டு தி.நகரிலிருந்த கன்னையாவின் புரொடக்க்ஷன் அலுவலக வீட்டுக்கே டாக்ஸியை விடச் சொன்னாள் சுமதி.

அவள் போனபோது கன்னையா துாக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. பெட்டி சாமான்களை வராந்தாவில் இறக்கி வைக்க அங்கே இருந்த புரொடக்க்ஷன் அலுவலகப் பையன் உதவி செய்தான். கன்னையாவின் ஏ.ஸி. அறையிலிருந்து யாரோ ஒர் இளம் எக்ஸ்ட்ரா நடிகை அவசர அவசரமாக வெளியேறுவதை அந்தப் பதற்றமான மன நிலையிலும் சுமதி கவனிக்கத் தவறவில்லை. நல்ல வேளையாக ஃபோன் வெளியில் இருந்தது. அங்கிருந்தே மறுபடி மேரிக்கு ஃபோன் செய்தாள் சுமதி. மேரி உடனே வருவதாகப் பதில் சொன்னாள். சுமதியின் மனத்தில் என்னவோ அந்தக் கணமே தன்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் சினிமா உலகின் ஒளிமிக்க புதிய ஜொலிப்பு வாழ்க்கை ஆரம்பமாவதாகவும் தோன்றியது. அவள் கனவுகளில் மூழ்கியபடியே அப்படி நினைத்தாள். கன்னையா துக்கம் விழித்துச் சோம்பல் முறித்தபடி அறையிலிருந்து வெளியே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/122&oldid=1146925" இலிருந்து மீள்விக்கப்பட்டது