பக்கம்:அனிச்ச மலர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

127


பதில் சொல்ல முயன்றாள் சுமதி. கன்னையாவின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

"உள்ளே அழுகைக் குரல் கேட்டிச்சு, ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற மாதிரிப் பட்டதாலே சந்தேகப்பட்டுக் கதவை நான்தான் தட்டச் சொன்னேன்” என்றாள் மேரி.

"நீங்க மூணுபேரும் கொஞ்சம் அங்கேயே இருங்க. நானே எங்கம்மாவைச் சமாதானப்படுத்திட்டு அப்புறம் உங்களை எல்லாம் கூப்பிடறேன்” என்றாள் சுமதி. அவள் சொன்னதை அவர்கள் கேட்டார்கள். அதன்படியே விலகிச் சென்றார்கள்.

சுமதி மறுபடி கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அம்மா அவளைக் கேட்டாள்.

“யாருடி இவங்கள்ளாம்? யாரோ ஒரு சட்டைக்காரிச்சிதான் உன்னை முழுக்க முழுக்கக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டான்னு வார்டன் அம்மாள் சொன்னாளே. அவ இவதானா? கெட்ட சகவாசம் மனுஷாளை எவ்வளவு கெடுக்கும்னு சொல்லவே முடியாது! உன்னை நான் மெட்ராஸுக்குப் படிக்க அனுப்பினதே தப்பு. என் புத்தியைச் செருப்பாலே அடிச்சிக்கணும்டீ,” என்று அம்மா மறுபடியும் இராமாயணத்தை ஆரம்பித்து விட்டாள். எப்படி அவள் வாயை அடைப்பதென்று சுமதிக்குப் புரியவில்லை.

"ஏன்ம்மா இப்படி ஒரேயடியாகக் கத்தறே கத்தி இரைஞ்சு ஊரைக்கூட்டறதிலே உனக்கென்னம்மா லாபம்? கேட்கிறதை நிதானமாகத்தான் கேளேன்.”

“நின்னு நிதானமா விசாரிக்கிற மாதிரிக் காரியத்தையாடீ நீ பண்ணியிருக்கே?"

“பெரிசா நான் எதையும் பண்ணிடலே. காலேஜை விட்டுட்டேன். சினிமாவிலே சேர்ந்திருக்கேன். இந்த வருஷக் கடைசிக்குள்ளேயே லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறேனா இல்லையா பாரேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/129&oldid=1132547" இலிருந்து மீள்விக்கப்பட்டது