பக்கம்:அனிச்ச மலர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அனிச்ச மலர்



கன்னையா ஏதோ ஜாடை பண்ணினார். உடனே மேரி, "சுமதீ! இங்கே வா. ஒரு நிமிஷம் தனியா உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று சுமதியை அறையின் ஒரு மூலைக்குக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். சுமதி ஒன்றும் புரியாமலும் மனத்தில் மேரி தன்னிடம் என்ன கேட்கப் போகிறாள் என்ற அனுமானம் கூட இல்லாமலும் அவளோடு சென்றாள். அறை மூலைக்குப் போனதும் பேசத் தொடங்கு முன் அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு குரலை மிகவும் சன்னமாகத் தாழ்த்தி, "காஷ்மீர்லே நடந்ததையெல்லாம் உன் மதர்கிட்டச் சொல்லியிருப்பியோன்னு கன்னையா பயப்படறாரு, நீ கெட்டிக்காரப் பொண்ணு. அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்னு நான் அவருக்கு உறுதி சொல்லியிருக்கேன். நீ சொல்லியிருக்க மாட்டியே?..” என்று கேட்டாள் மேரி.

அதைக் கேட்டுச் சுமதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளால் இதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. ஞாபகப்படுத்தப்பட்ட விஷயம் எதுவோ அதனால் திக்பிரமை பிடித்துப்போய் அப்படியே நின்று விட்டாள் அவள்.

“என்னடீ? சொல்லிட்டியா?”

வார்த்தைகளால் பதில் சொல்லும் சக்தியைச் சுமதி இழந்துவிட்டிருந்தாள். ஆனால் மேரி அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கவே பதில் சொல்லாவிட்டால் அவள் விடமாட்டாள் என்று படவே, 'சொல்லவில்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள். உடனே மேரி தயாரிப்பாளர் கன்னையாவை நோக்கி "அவ ஒண்ணும் அதெல்லாம் சொல்லலியாம்! எதுக்கும் நாளைக்குக் காலையிலே காண்ட்ராக்ட் எழுதிக்கலாம்! ரெண்டு தரப்புக்குமே அதுதான் நல்லது” என்று அந்த மூலையிலிருந்தே இரைந்து சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/134&oldid=1133116" இலிருந்து மீள்விக்கப்பட்டது