பக்கம்:அனிச்ச மலர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

133


அவள் அதுவரை அதைச் சொல்லவில்லை என்பதில் நிம்மதியும் அதற்கு மேலும் எப்போதாவது சொல்லிவிடக் கூடாதே என்பதில் எச்சரிக்கையும் அடைந்தார்கள் அவர்கள். அவள் கேட்டபடியே அன்று மாலைவரை தாயோடு வெளியே போய்வர அவளை அனுமதித்தார்கள். ஆனால் தங்கள் கம்பெனிக் காரிலேயே போய் வருமாறு தனக்கு மிகவும் நம்பிக்கையான டிரைவரைப் போட்டு அனுப்பினார் கன்னையா. "சுமதியை இரயிலேறிப் போகவிடக்கூடாது. அவள் தாயுடன் ஊருக்குப் போகிறாள் என்பதுபோல் தெரிந்தால் உடனே எனக்கு எங்கேயிருந்தாவது ஃபோனிலே சொல்லு" என்று டிரைவரிடம் இரகசியமாகச் சொல்லியியிருந்தார் கன்னையா.

கன்னையாவின் காரில்தான் சுமதியும் அவள் தாயும் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போனார்கள். யோகாம்பாள் அத்தை வீடு மகாலட்சுமி தெருவில் இருந்தது.

அங்கே போனதுமே அத்தையும் அம்மாவுமாகப் பேசி, "இவ ஜாதகப்படி ஒரு பரிகாரம் பண்ணனும். இங்கே பக்கத்திலே மந்திரிக்கிறது பார்வை பார்க்கிறதுலே கெட்டிக்காரரான வேளார் ஒருத்தர் இருக்கார். அவரை வரச் சொல்லி மந்திரிக்கலாம்” என்று முடிவு செய்து வேளாரை வரவழைத்து விட்டார்கள். சுமதியால் அதைத் தடுக்க முடியவில்லை. வேளார் பச்சைத் தண்ணீரை மண் குடத்தில் நிரப்பிப் பயறு, பழம், வெற்றிலை வைத்து வேப்பிலையைத் தண்ணீரில் தோய்த்துச் சுமதியைத் தலைவிரி கோலமாக உட்கார வைத்து மந்திரிக்கத் தொடங்கினார்.

"குழந்தை தூர தேசத்திலே போயி இருந்தப்பப் பயந்துக்கிட்டிருக்கு; சரியாயிடும்” என்று சொல்லி மடியிலிருந்து திருநீற்றுப் பையை எடுத்துச் சுமதியின் நெற்றியில் வேளார் தானே விபூதி பூசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/135&oldid=1146931" இலிருந்து மீள்விக்கப்பட்டது