பக்கம்:அனிச்ச மலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அனிச்ச மலர்


அங்கு சிறிது நேரத்திற்குமுன் சக மாணவிகள் கூட்டமாகக் கூடி அந்தப் புதுமுகம் தேவை என்ற விளம்பரத்தைப் படித்தபோது அதில் தனக்கு அக்கறையே இல்லாததுபோல் ஒதுங்கி விலகி உட்கார்ந்திருந்த சுமதி இப்போது பூனைபோல் ஒசைப்படாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். வார்டனின் விதியையும் மீறி அங்கே லவுஞ்சில் கிடந்த அந்தத் தினசரியை மங்கலான வெளிச்சத்திலும் தவறாமல் அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பச் சென்று கதவைத் தாழிட்டாள். தான் வெளியே சென்றது, பேப்பரை லவுஞ்சிலிருந்து எடுத்தது, அறைக்குத் திரும்பியது எதுவும் யாராலும் பார்க்கப்படவில்லை என்று உறுதி செய்துகொண்டு அறையின் விளக்கைப் போட்டாள். பின்பு நிதானமாக அந்தத் தினசரியில் அந்தப் பக்கத்தைத் தேடிப்பிடித்துப் 'புது முகங்கள் தேவை' என்ற விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினாள்.              

வெளியே பலருக்குமுன், உண்ணக் கூச்சப்பட்ட மிகவும் பிடித்தமான தின்பண்டம் ஒன்றை இரகசியமாக அறைக்கு வாங்கிவந்து விரும்பிய அளவு விரும்பிய விதத்தில் ருசித்துச் சாப்பிடுவதுபோல் அப்போது அவள் இருந்தாள். அந்த விளம்பரத்தை ஒவ்வொரு வாக்கியமாக ஒருமுறை, இருமுறை, மும்முறை, ஏன்? திரும்பத் திரும்ப அலுப்புத் தட்டும்வரை படித்தாள் அவள்.

“கல்லூரி மாணவிகளாயிருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் விசேஷ சலுகையுடன் கவனிக்கப்படும்” என்ற ஒரு வாக்கியத்தை அப்படியே அடிக்கோடிட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. விளம்பரத்தின் கீழே இருந்த விலாசத்தைப் பார்த்தாள். ஒரு தபால் பெட்டி எண்ணும் ஆற்காடு ரோடு கோடம்பாக்கம்-என்ற விவரமும் மட்டுமே இருந்தன. விளம்பரத்தின் மேற்பகுதியில் டெலிபோன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத் தவிரக் கதவு எண் எதுவும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/14&oldid=1146854" இலிருந்து மீள்விக்கப்பட்டது