பக்கம்:அனிச்ச மலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

13


சுமதி தன்னுடைய விண்ணப்பத்தை எழுதத் தொடங்கும்போது இரவு பதினொரு மணி ஐந்து நிமிஷம் ஆகி இருந்தது. செயலை மிஞ்சிய அதிகமான ஆர்வம் யாருக்கு எப்போது எதில் இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்ய முடியாது. ஆர்வம் தணிந்து சமனப் பட்டுச் செயலுக்கான நிதானம் வருகிறவரை எல்லாமே தாறுமாறாகவும்தான் முடியும். சுமதியும் அந்த நிலையில் தான் அப்போது இருந்தாள். அவளால் முதலில் நாலைந்து தாள்களை மாற்றி மாற்றி எழுதிக் கிழித்துப் போடத்தான் முடிந்தது. எதுவுமே சரியாக வரவில்லை. என்பது அதை எழுதிமுடித்த பின்பே தெரிந்தது. விண்ணப்பத்தோடு தன் புகைப்படம் ஒன்றையும் இணைத்தாள் அவள். கடைசியாகப் பன்னிரண்டேகால் மணிக்கு ஒரு விண்ணப்பத்தை முழுமையாக எழுதி முடித்தாள் அவள். தன்னுடைய கல்லூரி ஹாஸ்டல் நாள் விழாவில் தான் சகுந்தலையாக நடித்ததைப் பிரபல நடிகர் பாராட்டியதையும் அவள் அந்த விண்ணப்பத்தில் குறித்திருந்தாள். அதைப் பற்றித் தன் படத்துடன் வாரப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கின் 'கட்டிங்'கையும் விண்ணப்பத்தோடு இணைத்திருந்தாள். பின்பு ஞாபகமாக வராந்தா லவுஞ்சிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த தினசரிகளை அங்கேயே திருப்பிக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்தாள்.

எழுதிய விண்ணப்பத்தை உறையிலிட்டு விலாசம் எழுதி வைத்த பின்பும் சுமதிக்கு உறக்கம் வரவில்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்து நெடுநேரம் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். எதிர்காலத்தைப் பற்றி அவளாகத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட சுகங்களும் சந்தோஷங்களும் மனத்தில் புரண்டன. நடிப்புலகின் சக்கரவர்த்தியாக விளங்கும் ஒரு பெரிய நடிகரே தன்னைத் தாராளமாகப் பாராட்டி, அப்படிப் பாராட்டியது பகிரங்கமாகப் பிரபல பத்திரிகையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/15&oldid=1134457" இலிருந்து மீள்விக்கப்பட்டது