பக்கம்:அனிச்ச மலர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அனிச்ச மலர்

ஒரு சின்ன லிக்கர் பார்ட்டி இருக்கு நீயும் மேரியும்கூட அதுக்கு இருக்கணும். வர்ரவன் நான் கேட்கிறப்போ எல்லாம் லட்சம் லட்சமா எனக்குக் கடன் கொடுக் கிறவன். நீங்கள்ளாம் கூட இருந்து சுமுகமாப் பழகினிங் கன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். கொஞ்சம் தயவு பண்ணனும்” என்றார் கன்னையா. சுமதியால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. கன்னையாவே கெஞ்சிக் குழைந்துதான் அவளிடம் அதைக் கேட்டி ருந்தார்.

கல்லூரியில் முதன் முதலாக மேரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை எப்படி கடன்பட வைத்து வசப் படுத்தினாளோ அப்படியே அதே முறையில் கன்னை யாவும் அவளை மெல்ல நன்றிக் கடன்பட வைத்து வசப்படுத்தி விட்டார். அவளால் எதையும் முகத்தை முறித்தது போல மறுக்க முடியவில்லை, கன்னையா அவளை அடிமைபோல் ஆண்டார். அந்த இந்திக்காரனோடும் கன்னையாவோடும் மேரியோடும் சேர்ந்து அவளும் குடிக்க வேண்டியாதாயிற்று. கார்ச் சவாரியைப் பணப் பகட்டைத் தன்மீது அவசர அவசரமாகத் திணிக்கப் பட்ட நட்சத்திர அந்தஸ்தை - எதையும் இப்போதும் இனிமேலும் சுமதி இழக்கத் தயாராயில்லை. அவற்றை எல்லாம் பகிரங்கமாக இழக்காமல் இருப்பதற்காக வேறுசில விஷயங்களை ரகசியமாகவாவது இழக்கவும் அவள் தயாராகிவிட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாள ரின் பெரிய காரில் ஜவுளிக் கடை வாசலில் போய் இறங்கியபோது அன்று பகலில் முன்பு தன்கூடப் படித்த கல்லூரி மாணவிகளும், கடைக்காரரும் காண்பித்த மரியாதை அவளுக்கு நினைவு வந்ததது. சுமதி பல விஷயங்களை விட்டுக் கொடுக்கவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் புரிந்து கொண்டு விட்டாள். அவள் மாறுதல்கள் கன்னையாவுக்கும் ஓரளவு புரிந்துவிட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/152&oldid=1147373" இலிருந்து மீள்விக்கப்பட்டது