பக்கம்:அனிச்ச மலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அனிச்ச மலர்


வெளிவந்து தன் விண்ணப்பத்தில் தான் அதைக் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக அந்த விண்ணப்பத்துக்கு ஒரு மதிப்பையும், கனத்தையும் அளிக்கும் என்று அவளுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

எப்போது விடியும்? விடிந்ததும் தன் கைகளாலேயே ஸ்டாம்பு வாங்கி ஒட்டி அதைத் தபாலில் சேர்க்கப் போகிறோம் என்பதே அப்போது அவளுடைய ஒரே நினைவாக இருந்தது. வேறு நினைவுகள் எதுவுமே மனத்தில் தங்கவில்லை.

எவ்வளவு முயன்றும் துக்கம் வராமற்போகவே பெட்டியைத் திறந்து பல்வேறு சமயங்களில் பிடித்த தன் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு மூன்று ஆல்பங்களை எடுத்து மேசை விளக்கின் சுகமான உள் அடங்கிய வெளிச்சத்தில் திருட்டுத்தனமான மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினாள். தன் அழகையும் கவர்ச்சியையும், எவரையும் நிச்சயமாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் தன் உடற்செழிப்பையும், தானே இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள விரும்பினாற் போல் அவள் அந்தப் படங்களை இரசித்தாள். அந்தரங்கமான தாழ்வு மனப்பான்மை அப்போது அந்த ஊர்ஜிதத்தை விரும்பியது.

கோடை விடுமுறையின்போது கொடைக்கானலில் 'போனிரைட்'-குதிரை சவாரிக்காக அரை டிராயர் பனியனோடு குதிரைமேல் அமர்ந்து எடுத்த படம், டென்னிஸ் கோர்ட்டில் எடுத்த படம், இண்டர் காலேஜியேட் டிபேட்டின்போது வேறு கல்லூரி மாணவர்களோடு அவர்களே விரும்பிக் கேட்டதற்கு இணங்கி எடுத்துக் கொண்ட படம், என்.ஸி.ஸி. உடையில் சிப்பாயைப்போல் எடுத்துக்கொண்ட படம், எல்லாம் ஆல்பத்தில் இருந்தன. நகரின் வேறு கல்லூரி ஒன்றில் முன்பு நடந்த இண்டர் காலேஜியேட் டிபேட்டின் முடிவில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/16&oldid=1134524" இலிருந்து மீள்விக்கப்பட்டது