பக்கம்:அனிச்ச மலர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

165


சொல்லி அனுப்பிவிட்டார். சுமதியின் டான்ஸ் பாடங்கள் அரைகுறையாக நின்றன.

டான்ஸ் மாஸ்டர் போனதும் சுமதியைக் கூப்பிட்டு, "சுமதி? நீ வேணும்னாக் கீழே காலி பண்ணிட்டு மாடிக்கு வந்துடறியா? மாடியிலே ஏ.ஸி. போட்டுத் தந்துடறேன்” என்று கன்னையா கேட்டபோது சுமதி கீழேயே இருக்க விரும்புவதாகச் சொல்லிவிட்டாள். அடுத்த நாளே மாடிக்கு டிஸ்டம்பர் பூசி ஒழுங்குபடுத்தினார்கள். மாடியில் ஒரே ஹாலாக இருந்த பகுதிகள் இரண்டு மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டன. மாடிப் படியேறுகிற பகுதியில் வெளிப் பக்கத்திலிருந்தும் உட்பக்கத்திலிருந்தும் திறக்கவும், பூட்டவும், முடிந்த மாதிரி ஒர் இரும்புக் கம்பி வெளிக் கதவு வேறு புதிதாகப் போடப்பட்டது.

ஒருவாரம் கழித்து ஒருநாள் பிற்பகல் முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரம் இருக்கும்போது நாலைந்து தெலுங்குப் பெண்களோடு காரில் வந்து இறங்கினார் கன்னையா. சுமதி தான் வசித்துக் கொண்டிருந்த போர்ஷனில் இருந்து தற்செயலாக முன்பக்கம் வந்தவள் இந்தக் காட்சியைப் பார்த்தாள். கன்னையாவே ஓடிவந்து, "இனிமே இவங்கதான் இங்கே டான்ஸ் ஸ்கூல் நடத்தப் போறாங்க. பழைய ஆளு ஆம்பிளையா இருந்து தொலைச்சதாலே ரொம்பப் பொண்ணுங்க டான்ஸ் படிக்க நினைச்சாக்கூடப் பயந்து கூச்சப்பட்டாங்க, அதான் பொம்பிளைங்களாகக் கொண்டாந்துட்டேன். இவங்க 'குச்சுப்புடி' டான்ஸ்லே எக்ஸ்பர்ட். இங்கே நிறைய ஆந்திராக்காரர்களும் இருக்காங்க. அவங்க வீட்டுப் பெண்ணுங்கள்ளாம் படிக்க வரும். இந்த பொண்ணுங்க ரொம்ப நல்ல மாதிரி” என்று சுமதியிடம் தானே வலிந்து முந்திக் கொண்டு விவரங்களைச் சொன்னார். சுமதி இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் சொன்னதை முழுமையாக அவள் நம்பவும் இல்லை. ஏதோ அவசரம் அவசரமாக இட்டுக் கட்டிச் சொன்னது மாதிரி பட்டது. அதற்கு அடுத்த நாள் கன்னையாவின் வேலைக்காரப் பையனை எதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/167&oldid=1123588" இலிருந்து மீள்விக்கப்பட்டது