பக்கம்:அனிச்ச மலர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அனிச்ச மலர்


கொண்டு மாத்திரைகளை விழுங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். மாடியில் ’குச்சிப்புடி’ என்கிற பெயரில் ஆந்திர அழகிகள் குடியேறிய பின் அவள் டாக்டரம்மாவிடம் போகவேண்டிய முதல் முறை நாளன்று டாக்டரம்மா மேற்படிப்புக்காகப் பிரிட்டனுக்குப் புறப்பட்டுப் போய் விட்டாளென்று தெரிந்தது. அன்று போட வேண்டிய இன்ஜெக்‌ஷனையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. 'மெடிக்கல் செக்-அப்’ பையும் செய்து கொள்ள முடியவில்லை. வேறு டாக்டர்களிடம் போகலாம் என்றால் இந்த மாதிரி இரகசிய விஷயங்களுக்கு யாரை நம்பிப் போவது என்பது சுமதிக்குப் புரியவில்லை. கன்னையாவைப் போய்க் கேட்கலாம் என்றால் மாடியில் ஆந்திர அழகிகள் வந்த நாளிலிருந்து சுமதிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை நின்று போயிருந்தது. இரண்டொரு தடவைகள் கன்னையா வலிந்து தாமாகப் பேச முன்வந்தபோது கூடச் சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். ஆகவே அவரிடம் போய் லேடி டாக்டர் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்கச் சுமதிக்கு விருப்பமில்லை.

சுமதி உடனே மேரிக்கு ஃபோன் செய்தாள். மேரி மாலையில் வந்து டாக்ஸியில் லஸ் சர்ச் ரோடில் யாரோ ஒரு டாக்டரம்மாவிடம் சுமதியை அழைத்துச் சென்றாள். அந்த லேடி டாக்டர் மிகவும் கறாராக இருந்தாள். 'மிஸ் சுமதி’, என்று மேரி பேர் சொல்லி இருந்ததனால், "இது மாதிரி இன்ஜெக்‌ஷன்களைக் கலியாணமாகாத பெண்களுக்கு நான் போட்றதில்லேம்மா! தப்புப் பண்றவங்களுக்கு நாங்க ஒத்தாசையா இருக்க முடியாது. தயவு செய்து இது விஷயமா நீங்கள்ளாம் இனிமே என்னைத் தேடி வரப்பிடாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

"எல்லா டாக்டர்களும் இதுக்கு ஒத்துவர மாட்டாங்க. சிலபேர்தான் ஒத்து வருவாங்க. அந்தச் சில பேருக்கும் நிறையப் பணம் குடுக்கணும். ஆம்பிளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/170&oldid=1116070" இலிருந்து மீள்விக்கப்பட்டது