பக்கம்:அனிச்ச மலர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:172



"உன்னை நம்பி நம்பித் தானேடீ இந்தக் கதிக்கு வந்தேன்" என்று பதிலுக்குக் கூப்பாடு போட்டாள் சுமதி. அப்போது மாடிப்படியருகே யாரோ மடமடவென்று படியில் உருளுகிற ஓசையும் வேலைக்காரப் பையனின் கூப்பாடும் கேட்டன. சுமதியின் கவனமும், மேரியின் கவனமும் திசை திரும்பின.

சுமதியும், மேரியும் அறையிலிருந்து வெளியேறி வந்து பார்த்தால் கன்னையா மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்திருந்தார். “உள்ளே நீங்க ரெண்டுபேரும் சத்தம் போட்டுக்கிறதைக் கேட்டு மாடியிலேருந்து ஓடி வந்தாரு. வேஷ்டி தடுக்கிப் படியிலே விழுந்துட்டாரு” என்றான் வேலைக்காரப் பையன். சுமதியும் மேரியும் அருகில் நெருங்கிப் பார்த்தபோது சும்மா வேஷ்டி தடுக்கி மட்டும் அவர் விழவில்லை. நன்றாகக் குடித்திருந்தார் என்றும் தெரிந்தது. மாடியிலிருந்த தெலுங்குக் காரிகளின் சகவாசத்தில் சில நாட்களாக அவர் மூழ்கியிருந்ததில் சுமதிக்கு அவர்மேலே ஒரு வெறுப்பு. ஆனாலும் இப்படிச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

கீழே விழுந்த கன்னையாவுக்கு முழங்கால் பட்டை பிசகிவிட்டது. எழுந்திருக்க முடியவில்லை. உடனே மேரி பையனைக் கூப்பிட்டு, "காரை எடுக்கச் சொல்லுப்பா, உடனே டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போயாகணும்!” என்றாள். பையன் டிரைவரிடம் காரை எடுக்கச் சொல்லி அவசரப் படுத்தினான். எழுந்திருக்க முடியாமல் தரை யில் வேஷ்டி அவிழ விழுந்து கிடந்த கன்னையாவின் இடுப்பில் வேஷ்டியை இறுக்கிக் கட்டிவிட்டுப் 'பெல்ட்'டும் போட்ட பின் மேரி ஒரு பக்கமும், சுமதி ஒருபக்கமும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் ஏற்றினார்கள். காரின் முன் ஷீட்டைக் கழற்றி இன்னும் சிறிது முன்னுக்கு நகர்த்திய பின்னர் பின் பக்கத்து இருக்கையில் இடவசதியை அதிகமாக்கிக் கொண்டுதான் கன்னையாவைக் காரில் கிடத்துவதற்கு முடிந்தது. வலது முழங்காலில் சிறிது 'ஃபிராக்சர்'. இருக்குமோ என்று தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/174&oldid=1116698" இலிருந்து மீள்விக்கப்பட்டது