பக்கம்:அனிச்ச மலர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அனிச்ச மலர்

 தான் பார்த்த விளம்பரத்திற்கும், இப்போது அனுப்பப் பட்டிருக்கும் விவரத்தாள்களில் உள்ள பெயருக்கும் உள்ள வேறுபாட்டை இப்போது அவள் சிந்தித்தாள். விளம்பரத்தில் 'பாலன் நாடகக் குழு’ என்று அச்சிட்டிருந்தார்கள். இப்போது தபாலில் கிடைத்திருக்கிற தாள்களில் எல்லாம் ’சொப்பன உலகம்’ நாடகக் குழு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் எது உண்மையான பெயர் என்று தெரியவில்லையே எதற்காக இப்படி இரண்டு பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசித்தாள் சுமதி. பிரபல நடிகர் ஒருவர் தன்னைப் புகழ்ந்தது பற்றிய பத்திரிகைக் கட்டிங்கை இணைத்து அனுப்பியிருந்தும், எல்லாருக்கும் எழுதுவது போல் சாதாரணப் பதிலைத் தனக்கும் அவர் எழுதியிருந்ததை அவள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பதில் கடிதத்தை அவர்கள் ஒரு சுற்றறிக்கைபோல எல்லாருக்கும் பொதுவாகவே தயாரித்திருந்தார்கள் என்று தோன்றியது. அதில், கூடியவரை தங்களைப் பற்றிய சுய விளம்பரத்தைச் செய்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

விண்ணப்பத்தாள் போல் தெரிந்த நீண்ட ஃபாரத்தைப் பிரித்துப் பார்த்தாள். பெயர், உயரம், எடை, இடையளவு, மார்பளவு, வயது, மொழி, பேசத் தெரிந்த பிற மொழிகள், படிப்பு என்பவை பற்றிய கட்டங்கள் பூர்த்தி செய்வதற்கென்று காலியாக விடப்பட்டிருந்தன. மோட்டார் ஓட்டத் தெரியுமா, சைக்கிள் விடுவதற்குப் பழக்கம் உண்டா, நடனம் ஆடத் தெரியுமா, தெரியுமானால் என்னென்ன வகை நடனங்கள் தெரியும் என்றெல்லாம் வேறு கேள்விகள் இருந்தன.

அந்த விண்ணப்பத் தாளின் அடியில் தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்டு அச்சிடப்பட்டிருந்த வாக்கியம் சுமதியின் கவனத்தைக் கவர்ந்தது.

விண்ணப்பத்தாளுடன் ரூபாய் 100 மணியார்டர் செய்துவிட்டு எம்.ஓ. ரசீதை மறக்காமல் இணைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/20&oldid=1134555" இலிருந்து மீள்விக்கப்பட்டது