பக்கம்:அனிச்ச மலர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அனிச்ச மலர்




வரச்சொல்லி வேண்டி ஒரு சிறு துண்டுத் தாளில் அவளிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினாள் சுமதி.

முதல் பீரியடு முடிந்து எப்போது மேரி வரப்போகிறாள் என்று அவள் வருகிற நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்று தான் கூப்பிட்டுச் சொல்லியனுப்புகிற இதே மேரி சில வாரங்களுக்கு முன் தன் அறையைத் தேடி வந்தபோது தான் அவளை உதாசீனப்படுத்தி அனுப்பியது சுமதிக்கு நினைவு வந்தது. அன்று, தான் அவளிடம் நடந்து கொண்டதை நினைத்தால் இப்போது வருத்தமாகக்கூட இருந்தது. ஆனால் மேரி என்னவோ இவள் உதாசீனப்படுத்தியதைக்கூட அவ்வளவு ஸீரியஸ்ஸாக அன்று எடுத்துக் கொள்ளவில்லை.

'சரிǃ சரி! இப்போது இப்படித்தான் சொல்வாய். என்றாவது ஒரு நாள் நீயும் என் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்?’ என்று சொல்வது போல் சிரித்துக் கொண்டே போய்விட்டாள் மேரி. -

மேரி ஒரு தினுசானவள் என்பது கல்லூரியில் எல்லாருக்கும் தெரியும். நேரடியாகத் தெரியாதவர் களுக்கு இலைமறை காயாக அது தெரியும். மலேசியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், மொரீசியஸிலிருந்தும் அந்தக் கல்லூரியில் வந்து தங்கிப் படிக்கும் பல பெண்கள் மேரியின் தோழிகள். அந்த வெளிநாட்டுப் பெண்களுக்குப் பணத் தட்டுப்பாடு வரும் போது, பகுதி நேர வேலைகளில் இங்கேயே சம்பாதிக்கும் வழிகளை மேரி தேடிக் கொடுத்தாள். அவள் தேடிக் கொடுக்கிற வேலைகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றி வதந்திகளும், கேலிகளும், அபாண்டங்களுமாக நிறையப் பேச்சுக்கள் இருந்தன. ஆனாலும் அந்த வெளிநாட்டு மாணவிகளில் பலர் தொடர்ந்து மேரியிடம் விசுவாசமாகவும், பிரியமாகவும்தான் இருந்து வந்தனர். வெளிநாட்டு மாணவிகளைத் தவிர உள்நாட்டு மாணவிகளுக்குள்ளேயும் அழகிய தோற்றத்தை உடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/30&oldid=1132016" இலிருந்து மீள்விக்கப்பட்டது