பக்கம்:அனிச்ச மலர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அனிச்ச மலர்


"கூச்சப்படாம எங்கிட்டச் சொல்லு சுமதி... நான் என்ன செய்யனும்? பீ பிஃராங் வித் மி...”

"எனக்கு ஒரு நூறு ரூபாய் அவசரமா வேணும்...” அப்பாடா! விஷயத்தை ஒரு மாதிரி எப்படியோ மேரியிடம் சொல்லிவிட்ட திருப்தி சுமதிக்கு ஏற்பட்டது. அப்படியானால் நீ இன்றே ஃபேர்லாண்ட்ஸ் ரிக்ரியேஷன் கிளப்புக்கு வர்த் தயாரா?' என்று மேரி உடனே தன்னைத் திருப்பிக் கேட்கக்கூடும் என்று சுமதி எதிர்பார்த்தாள். ஆனால் மேரி மறுபேச்சுப் பேசாமல் தன் கையிலிருந்த சிறு டம்பப் பையைத் திறந்து புத்தம் புதிதாகப் பத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி உடனே சுமதியிடம் நீட்டினாள். எந்த நிபந்தனையு மின்றியே நீட்டினாள்.

இவ்வளவு விரைந்து அவளிடமிருந்து பணம் கிடைக் கும் என்பதை எதிர்பார்த்திராத சுமதி அதை வாங்கு வதற்குத் தயங்கினாள். மேரி பணத்தை மேஜைமேல் வைத்து அது காற்றில் பறந்துவிடாமல் அருகிலிருந்த ஒரு புத்தகத்தையும் அதன் பாதிப்பகுதி மறைகிறாற்போல் ‘வெயிட்' ஆக மேலே எடுத்து வைத்தாள்.

அப்போது உடனே சுமதியின் மனக்கண்ணில் பிரமையாக ஒரு தோற்றம் உருவாகித் தோன்றியது. செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு பெரிய தோட்டத் தோடு கூடிய ஒட்டடுக்கு வீட்டில் அகன்ற நடுக்கூடத்தில் தொந்தியும் தொப்பையுமாக அமர்ந்து சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டே சீட்டாடும் ஒரு கோஷ்டிக்குமுன் மேரி தன்னை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி ஒரு டிரேயையும் தன் கையில் கொடுத்துப் "போ சுமதி! இதமாக நடந்துக்கோ... எல்லாம் ரிச் பீப்பிள்” என்று அவர்களை நோக்கித் தன்னை துரத்து வதுபோல் தோன்றியது. ஆனால் அது தானாகக் கற்பித் துக் கொண்டது என்பதை அடுத்தகணமே சுமதி உணர முடிந்தது. மேரி பணத்தை எடுத்து வைத்துவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/34&oldid=1146871" இலிருந்து மீள்விக்கப்பட்டது