பக்கம்:அனிச்ச மலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

37


வருவதைப் பார்க்கும் அற்ப சந்தோஷத்தை இனியாவது விட்டு விடு. அது உன் படிப்பைக் குட்டிச் சுவராக்கிவிடும். இந்த மாதம் நான் குறைவாகப் பணம் அனுப்புவதற்காக வருத்தப்படாதே. அடுத்த மாதம் எதை மிச்சம் பிடித்தாவது வழக்கம்போல் அனுப்பி விடுவேன்.

இப்படிக்கு அன்புடன் உன் அம்மா பெரியநாயகி. கடிதத்தைப் படித்ததும் சுமதியின் மனத்தில் உறுத்திய முதல் விஷயம் அம்மா குறைவாகப் பணம் அனுப்பப் போகிறாள் என்பதுதான். மேரியின் பணத்தை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பது உறுதியாயிற்று. இரண்டாவதாக அந்தக் கடிதத்தில் அவளுக்குப் பிடிக்காத விஷயம் சினிமாவைப் பற்றி அம்மா அறுத்திருந்த அறுவை. புலவர் பரீட்சைகளைப் பிரைவேட்டாக எழுதிப் பாஸ் செய்து அம்மா தமிழ்ப் பண்டிட் ஆனாலும் ஆனாள். அவள் கடிதங்கள் எல்லாம் ஒரே உபதேச காண்டங்களாகவே வந்து சேருகின்றன. வெறும் ஸெகண்டரி கிரேட் டீச்சராக இருந்தபோது அம்மா இவ்வளவு துாரம் உபதேசம் செய்யமாட்டாள். தமிழ் பண்டிட் ஆனவுடன் அம்மா நிறைய உபதேசம் செய்வதற்குக் கற்றுக் கொண்டு விட்டாளோ என்றெண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு சுமதி கடிதத்தை மடித்து மேஜை மேலிருந்த கல்லூரிக் காலண்டரில் சொருகினாள்.

அறை வாசலில் நிழல் தட்டியது. சுமதி திரும்பினாள். மேரி நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே, "இங்கிலீஸ் லெக்சரர் லீவாம். ஈவினிங் கிளாஸ் இல்லே. உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றாள்.

“உள்ளே வாயேன்! ஏன் வாசல்லேயே நிற்கிறே?” மேரி உள்ளே வந்தாள். - "இன்னிக்கும் நீ காலேஜுக்கு லீவா சுமதி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/39&oldid=1133140" இலிருந்து மீள்விக்கப்பட்டது