பக்கம்:அனிச்ச மலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அனிச்ச மலர்

மறுநாள் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மேரி கல்லூரிக்கு வந்துவிட்டாள். அவளே சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். முதல் நாள் சுமதிக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டதாகச் சொல்லித் தானாகவே வலிந்து முதலில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். சுமதி சிறிது நேரம் தயங்கியபின் ஒரு சிறிதும் ஒளிவு மறைவின்றி எல்லா விவரங்களையும் மேரியிடம் சொல்லி அவள் கடனாகத் தந்த பணத்தை நாலு தவணையில் ஐம்பது ரூபாயாகத் தந்து விடுவதாய்த் தெரிவித்தபோது மேரி "வாட் எஃ பூலிஷ் கேர்ள் யூ ஆர்?.பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்தா நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணினே?” என்று பதிலுக்கு வினவினாள்.

"அதிலே என்ன தப்பு?நடிப்பிலே முன்னுக்கு வந்து பேரும் புகழும் சம்பாதிக்கணும்னு எனக்கு ஆசை. பணத்தைக் கட்டி அப்ளை பண்ணியிருக்கேன்.”

இதைக் கேட்டு மேரி பதில் சொல்லாமல் சிரித்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து, இதெல்லாம் பணம் கட்டி 'அப்ளைப் பண்ணி சான்ஸ் வர்ர விஷயமில்லே; உண்மையிலேயே நீ ஸ்டாராகணும்னு இண்ட்ரெஸ்ட் இருந்தால் என்னோட புறப்பட்டு வா. எங்க வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு தினம் சாயங்காலம் நாலஞ்சு பெரிய புரொடியூஸர்ஸ் வர்ராங்க ரெண்டு மூணு புகழ்பெற்ற டைரக்டர்ஸ்கூட வர்ராங்க. நான் அவங்ககிட்ட உன்னை இன்ட்ரொடியூஸ் பண்ணி சான்ஸ் வாங்கித் தரேன். அது ஒண்ணும் கஷ்டமில்லே; என்னாலே சுலபமா முடியும். அதைச் செய் சுமதி".

சுமதி ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு வருகிற தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு மேரியிடம் கேட்டாள். மேரி சிறிதும் தயங்காமல் உடனே பெயர்களை அடுக்கி விவரித்தாள். எல்லாமே புகழ் பெற்ற பெரிய பெயர்களாகவே இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/54&oldid=1116665" இலிருந்து மீள்விக்கப்பட்டது