பக்கம்:அனிச்ச மலர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அனிச்ச மலர்



எப்படிப்பட்ட இடமோ என்று தயங்கி வடபழனி பஸ் ஸ்டாண்டுவரை பஸ்சில் போய் அங்கே இறங்கி ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு போனாள் சுமதி. அந்த இடம் வடபழனியிலிருந்து மிகவும் பக்கத்தில்தான் இருந்தது. டாக்சியை 'வெயிட்டிங்'கில் வைத்துக் கொண்டே விசாரித்தாள் அவள். அந்தக் கட்டிடத்தில் பாத்ரும் அளவு சிறியதாயிருந்த ஒர் அறையைச் சுட்டிக் காட்டி "நேத்து வரை யாரோ இருந்தாங்கம்மா. நேத்துச் சாயங்காலமாத்தான் வாடகை கணக்கைத் தீர்த்துக் காலி பண்ணினாங்க” என்றார் கட்டிடச் சொந்தக்காரர். சுமதி விவரங்களைச் சொல்லி விசாரித்தாள்.

"தினம் நூறு நூறு ரூபாய் மணியார்டரா ஆயிரம் இரண்டாயிரம்னு பத்துப் பன்னிரண்டு நாளா வந்துச்ச வாங்கினாங்க... பணமெல்லாம் வந்ததும் காலி பண்ணிட் டாங்க...” என்று கர்மயோகியைப் போல் பட்டுக் கொள்ளாமல் பதில் சொன்னார் கட்டிடச் சொந்தக்காரர். சுமதி மேலும் எதற்கோ தயங்கி நின்றபோது,

“எங்களுக்கு வாடகை ஒழுங்காகக் குடுக்குறாங்களா இல்லையான்னுதான் நாங்க பார்ப்போமே ஒழிய டெனன்ட்ஸ் என்ன மாதிரி பிஸினஸ் பண்றாங்கன்னு பார்க்கிறது எங்க வேலையில்லை. உங்களை மாதிரி விவரந் தெரிஞ்சவங்க இப்படி விளம்பரத்தை எல்லாம் நம்பிப் பணம் அனுப்பலாமா?" என்று கேட்டார் அவர். சுமதி தொடர்ந்தாள்.

"அவங்களுக்கு டெலிஃபோன் கூட இருந்திச்சே சார்?"

"டெலிஃபோனாவது ஒண்ணாவது? எங்க டெலிஃபோன் நம்பரை அவங்க லெட்டர் ஹெட்லே அச்சடிச்சுக்கிட்டாங்க, அவ்வளவுதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/60&oldid=1117501" இலிருந்து மீள்விக்கப்பட்டது