பக்கம்:அனிச்ச மலர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

67


"நான் தரேண்டி அருமையான ஸாரி, புறப்படு. ஸாரி மட்டுமில்லே. ஹேர் ஆயில், சோப்பு, எது வேணும்னாலும் நான் தரேன். உனக்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கோ உன்கில்லாததாடி?”

விமலா இதைச் சொல்லியபோது தன்னைக் குத்திக் காட்டிக் கிண்டல் செய்கிறாளோ என்று சுமதிக்கு முதலில் அவள்மேல் கோபம்தான் வந்தது. ஹேர் ஆயில் வாசனைப் பவுடர் இதெல்லாம் வேண்டாம் என்று அம்மா தனக்கு எழுதிய கடிதத்தைத் தான் எங்காவது அசந்து மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தபோது, விமலா எடுத்துப் படித்துப் பார்த்திருப்பாளோ என்று கூடச் சுமதிக்குச் சந்தேகமாயிருந்தது. ஒன்று, அவள் அந்தக் கடிதத்தைப் படித்திருக்க வேண்டும். அல்லது தன்னுடைய ஹேர் ஆயில், ஸ்நோ, பவுடர் இவை எல்லாம் தீர்ந்தபின் தான் புதியவற்றை வாங்காமலே இருப்பதைப் பார்த்து விமலாவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் விமலா அதைச் சொல்லிய விதம் கிண்டலாகவோ, கேலியாகவோ இல்லை. அவள் இரண்டாவது முறையாகவும், அதே விஷயத்தைச் சொல்லிய விதம் உண்மையாகவே சுமதி தன்கூட வருவதை விரும்பும் தொனியில்தான் இருந்தது. விமலாவின் தாராளமான முகஸ்துதி சுமதியை அவள் வசப்படுத்தியது. "உனக்கு எதுக்குடி பவுடர், ஹேர் ஆயில் எல்லாம்? நீ எந்த ஸாரி கட்டிண்டாலும் அழகாயிருக்கப் போறே. நீ கட்டிக்கிற ஸாரிக்குத்தான் உன்னாலே அழகு. ஸாரியாலே உனக்கு என்ன அழகு?”

சுமதி அன்று விமலாவோடு யூனிவர்சிட்டி லைப்ர்ரிக்குப் புறப்பட்டாள். மாதக் கணக்கில் எங்குமே வெளியே போகாத சுமதி அன்று புறப்பட்டிருந்தாள் என்பதால் வார்டன் அனுமதி மறுக்கவில்லை. பகல் நேரத்தில் விமலாவும் துணைக்கு வர அவள் போகிறாள் என்பதாலும் வார்டன் அம்மாளுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/69&oldid=1116962" இலிருந்து மீள்விக்கப்பட்டது