பக்கம்:அனிச்ச மலர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

69


பார்வையும் கவனமும் அவள் மேலிருந்து விலகவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அவர்கள் இருவருமே அவளருகே நெருங்கி வந்தனர்.

"என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அன்னக்கி ஹோட்டல் குபேராவிலிருந்து நான்தானேம்மா இட்டாந்தேன்" தணிந்த குரலில் அந்த இருவரில் ஒருவன் சுமதியை நோக்கி ஏதோ சொன்னான்.

சுமதி பதில் சொல்லவில்லை. ரவுடிகளைப் போல வும், காலிப் பயல்களைப் போலவும் தோற்றமளித்த அவர்களிடம் தனக்கென்ன பேச்சு வந்தது என்று வாயை இறுகப் பொத்திக் கொண்டு பேசாமலிருந்தாள் அவள்.

"என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அல்லது மறந்துட்டாப்ல நடிக்கிறியா? செயிண்ட் தாமஸ் மவுண்ட் சட்டைக்காரிச்சி ஒருத்தி-அதுகூட இங்கேதாம்மா படிக்குது அந்தப் பொண்ணுசுட நீ வரமாட்டே? கபாலியை அதுக்குள்ளார மறந்தா போச்சு?”

"நீங்க ரெண்டு பேரும் யாரு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியாதுப்பா. ஆனா நீங்க ஏதோ ரொம்பத் தெரிஞ்சமாதிரிப் பேசறீங்க. வேற யாரோன்னு தவறாகப் புரிஞ்சிகிட்டுப் பேசறதாத் தெரியுது . நான் உங்களை இதுக்கு முன்னாடிப் பார்த்ததே கிடையாது..." என்று சுமதி கண்டிப்பான குரலில் இரைந்ததும் அவர்கள் இருவரில் ஒருவன், "சர்த்தான் விடுடா! புதிசா வேஷம் போடுது. பெரிய பத்தினித் தங்கமாட்டம் பேசுது” என்றான்.

சுமதிக்கு ஆத்திரம் மூண்டது.

"வாயை அடக்கிப் பேசு! போலீஸ்லே பிடிச்சுக் குடுக்கனுமா ?”

அவள் இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும்போது விமலா திரும்பி வந்துவிட்டாள். அந்த இரு ரவுடிகளும் கூட மெல்ல மெல்ல ஒதுங்கிவிட்டனர். விமலாவும் பக்கத்தில் வந்து சேர்ந்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/71&oldid=1117705" இலிருந்து மீள்விக்கப்பட்டது