பக்கம்:அனிச்ச மலர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அனிச்ச மலர்


"என்னடி சுமதி ஏதாவது தகராறா? யார் அந்த ஆட்கள்? வரவர நம்ம காலேஜ் பஸ் ஸ்டாப் பெரிய வம்புபிடித்த இடமாப்போச்சு. எத்தனையோ தடவை பிரின்ஸிபால் கிட்டவும், வார்டன் கிட்டவும், கம்ப்ளெயிண்ட் பண்ணி அவங்க போலீஸ் கமிஷனருக்குப் புகார் எழுதி இங்கே இந்த பஸ் ஸ்டாப் கிட்ட ஒரு போலீஸ்காரன் காவல் நிற்கறதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க. இன்னிக்கு வீவு நாளோ இல்லையோ அதனாலே அந்தப் போலீஸ் பாராவைக் கூடக் காணோம். ஏதாவது பெரிய தகராறு ஆனால் வார்டன் ரூமுக்குப் போய் ஃபோன் பண்ணிட்டுப் போகலாம் வர்ரயா?” என்று விமலா கேட்டவுடன், “அதெல்லாம் ஒண்ணு மில்லேடி! காலிப்பசங்க கிட்டவந்து நின்னு யாரிட்டவோ பேசற மாதிரி ஜாடைமாடையா ஏதோ உளறினாங்க. கொஞ்ச நாழி பொறுத்துப் பார்த்தேன், முடியலே. காது கொடுத்துக் கேட்க முடியாதபடி எல்லை மீறிப் போச்சு, அப்புறம் பதிலுக்கு நாலு வார்த்தை விட்டேன், வாயை மூடிண்டு போனாங்க” என்ற சிரித்தபடியே விமலாவுக்கு மறு மொழி கூறினாள் சுமதி.

“பேசினால்கூடப் புரியாது தடியங்களுக்கு, காலிலே இருக்கிறதைக் கழற்றி செமத்தியா நாலு வாங்கு வாங்கியிருக்கனும், அப்பத்தான் புரியும்.”

பஸ் வந்தது. இருவரும் ஏறிப் புறப்பட்டனர். விமலாவோடு சகஜமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றாலும் சுமதியின் மனம் என்னவோ பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த இரு தரகர்களையும் சுற்றியே இருந்தது. மேரி அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த வேறு யாரோ ஒரு பெண் என்று தன்னைத் தப்பாகப் புரிந்துகொண்டு அவர்கள் தன்னிடம் வந்து பேசியிருப்பதைச் சுமதி தெரிந்துகொண்டாள்.

யூனிவர்சிட்டி லைப்ரரியில் வேலை முடிந்து எதிரே கடற்கரை மெரீனா கேண்டீனில் தேநீர் அருந்தச் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/72&oldid=1117702" இலிருந்து மீள்விக்கப்பட்டது