பக்கம்:அனிச்ச மலர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72:

அனிச்ச மலர்

சொன்னாள். அப்போது அருகே அமர்ந்திருந்த மேரி, "எக்ஸாக்ட்லி" என்ற வியந்தாள். உடனே மற்றொருத்தி குத்தலாகக் கேட்டாள்:

"இதுக்கென்னடி அர்த்தம்? சுமதிக்குத்தான் இந்த ஸாரி மேட்ச் ஆகும்னா இவளுக்கு மேட்ச் ஆகலேங்கறிங்களா?”.

நல்லவேளை! இதற்குள்ளாக லெக்சரர் அம்மாள் வகுப்புக்குள் நுழைந்து விடவே இந்தச் சர்ச்சை ஒய்ந்துவிட்டது.

மறுநாள் காலை வகுப்புக்களும், கல்லூரியும் தொடங்குவதற்கு ஓர் அரை மணி நேரம் முன்னதாகவே மேரி, சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். அவள் கையில் ஒரு பெரிய காகிதப் பொட்டலம் இருந்தது. அறைக்குள் நுழைந்த மேரி சுமதிக்கு முன்னாலேயே அதைப் பிரித்துக் காட்டினாள். முதல் நாள் வகுப்பில் யாரோ ஒருத்தி கட்டிக் கொண்டு வந்திருந்த அதே பாம்பே வாயில் புடவை மேரியின் கையில் இருந்தது.

"எடுத்துக்கொள்! உனக்காகத்தான் நேற்று மாலையே பிராட்வேயில் ஷோரூமுக்கே தேடிப் போய் இதை வாங்கிக் கொண்டு வந்தேன் சுமதி!”

-நல்ல வேளையாக அறையில் உடன் வசிக்கும் விமலா அப்போது வெளியே போயிருந்தாள்.

"என்னைக் கேட்காமல் என் சம்மதமில்லாமல் நீ இதை எப்படி எனக்கு வாங்கிக் கொண்டு வரலாம் மேரி?"

"இது உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்து வாங்கி வந்தேன். நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன் சுமதி.”

"மறுத்துவிட்டால் என்னடி செய்வே?”

"உன் பிரியமுள்ள சிநேகிதியை நீ அப்படி எல்லாம் சோதனை செய்யமாட்டாய் என்று எனக்குத் தெரியும் சுமதி!' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/74&oldid=1117708" இலிருந்து மீள்விக்கப்பட்டது