பக்கம்:அனிச்ச மலர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அனிச்ச மலர்

"அதெல்லாம் நீயா நினைக்கிறே சுமதி அவங்க எல்லாரும் உன்னை நல்லாக் கவனிச்சுப் பார்த்திருக்காங்க. இன்னிக்கு வரச் சொல்லிக் கூப்பிடறாரே, இவரு ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான் ஒரு கேள்வியோ விசாரணையோ, இல்லாமே நேரே மேக்-அப் டெஸ்ட்'டுக்கே உன்னை வரச் சொல்றாரு”.

'மேக்-அப் டெஸ்ட்டுன்னா எப்படி வரணும் ? என்னென்ன செய்வாங்க...'

"ஒண்ணும் கடிச்சு முழுங்கிடமாட்டாங்க. சும்மா பயப்படாமே வாடி சுமதி!”

"நீ அன்னிக்கு வாங்கிக் குடுத்தியே அந்த வாயில் ஸாரியைக் கட்டிண்டு வரட்டுமா மேரி ?

“நைஸ் ஐடியா! அதையே கட்டிக்கிட்டு வா சுமதி! அவசியம்னா இங்கே வந்ததும் இவங்க வேறே மேக்-அப் போட்டுக் காமிராவுக்கு முன்னே நிறுத்திப் பாப்பாங்க.. கரெக்ட்டாப் பத்து மணிக்கு வந்துடு. முன்னாடி வந்தால் தப்பில்லே ஆனா லேட்டா மட்டும் வராதே...”

இந்த அழைப்பு சுமதிக்கு உள்ளுறப் பெருமகிழ்ச்சியைத்தான் அளித்திருந்தது. அன்று விடுமுறை நாளாகையினால் பாட சம்பந்தமாக ஏதோ படிப்பதற்காக யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று அறைத் தோழி விமலா சொல்லிக் கொண்டிருந்தாள். அவளோடு சேர்ந்து யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போகவேண்டும் என்ற அனுமதி கேட்டால் வார்டன் உடனே வெளியே போக அனுமதித்து விடுவாள். விடுதியிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்ததும் விமலாவிடம் சொல்லி விட்டுத் தரணி ஸ்டுடியோவுக்கு ஒரு டாக்சியில் பறக்க வேண்டும் என்று திட்டமிட்டு முடிவு செய்துகொண்டாள் சுமதி. விமலாவிடம் ஸ்டுடியோவில் மேக்-அப் டெஸ்டுக்குப் போவதாகச் சொல்லாமல் வேறெதாவது பொய் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் நினைத் துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/76&oldid=1120231" இலிருந்து மீள்விக்கப்பட்டது