பக்கம்:அனிச்ச மலர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

75

நினைத்தபடியே செய்வதில் எந்தத் தடையும் இல்லை. வாரம் தவறாமல் லீவு நாட்களில் சுமதியும், விமலாவும் புத்தகங்கள் படிக்க யூனிவர்ஸிடி லைப்ரரிக் குப் போவது பற்றிய மகிழ்ச்சியுடன் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தாள். அனுமதி பெற்று விடுதி காம்பவுண்டுக்கு வெளியே வந்தவுடன் முதல் வேலையாக, "அடி விமலா! நீ தப்பாக நினைத்துக் கொள்ளாதே. தி.நகரில் எங்க உறவுக்காரங்க வீட்டுக்கு ஒரு முக்கிய வேலையா நான் போயாகனும், நீ பன்னிரண்டரை மணிவரை லைப்ரரியிலேயே இரு. நான் தி.நகரிலிருந்து நேரே அங்கேயே வந்து விடுகிறேன். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து திரும்பி வந்துடலாம். ஒருவேளை பன்னிரண்டரை மணிக்குள்ளே நான் அங்கே திரும்பி வரலேன்னா நீ எனக்காக வெயிட் பண்ணவேண்டாம்” என்றாள்.
விமலா அதற்குச் சம்மதித்தாள். அவளைப் பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு அருகிலிருந்த டாக்ஸி ஸ்டாண்டிற்கு விரைந்தாள் சுமதி. ஒன்பதே முக்கால் மணிக்கே மேரி ஸ்டுடியோவில் வந்து காத்துக் கொண்டிருப்பதாகச் சுமதியிடம் டெலிஃபோனில் சொல்லியிருந்தாள். டாக்ஸி ஸ்டாண்டில் அவளுக்கு இன்னோர் ஆச்சரியம் காத்திருந்தது. அன்றொரு நாள் மேரியையும் அவளையும் சினிமாத் தியேட்டருக்குச் சவாரி கொண்டு போய் விட்ட அதே டாக்ஸி டிரைவர் வண்டியோடு இருந்தான். அவன் சுமதியைப் பார்த்ததும், "என்னம்மா? செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டே மீட்டரை போட்டது அவளுக்குப் பிடிக்க வில்லை.
'இல்லை! கோடம்பாக்கம் தரணி ஸ்டுடியோவுக்குப் போ. அவசரம்! ஏம்ப்பா எப்ப வண்டியிலே ஏறினாலும் செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கான்னு கேட்டா என்ன அர்த்தம் ?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/77&oldid=1122205" இலிருந்து மீள்விக்கப்பட்டது