பக்கம்:அனிச்ச மலர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

79

நாற்காலிலே உட்கார்ந்துதான் மேக்-அப் போட்டுகிட்டா. தெரியுமா?” என்று சுமதியின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். அவருடைய கையை எடுத்து உதறினால் எங்கே கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி போய் விடுமோ என்ற பயத்தில் சுமதி அப்போது அதைச் சகித்துக் கொண்டாள்.

"இந்தாப்பா!... புருவத்தைக் கத்திரிச்சுப்பிடாதே. இவ காலேஜிலே படிக்கிற பொண்ணு. இப்போதைக்குச் சும்மா 'அய் பிராமினன்ஸ்' வர்ற மாதிரி ஏதாச்சும் அட் ஜஸ்ட் பண்ணிக்க” என்ற சுமதிக்காக அவரே அக்கறை எடுத்துக் கொண்டு மேக்-அப் மேனை எச்சரித்தார்.

மேக்-அப் மேன் தன் தலையை-முகத்தை-மோவாயை-தோள் பட்டையை எல்லாம் தாராளமாகத் தொட்டபோது கூடச் சுமதிக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கூச்சங்களை அவளே உதற முயன்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டாள். தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டாள். வேற்று ஆடவர் தொடக் கூசும் மனத்தையும் உடலையும் வைத்துக் கொண்டு சினிமாவில் சோபிக்க முடியாது என்பது சுமதிக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது.

மேக்-அப் முடிந்ததும் அவரே அவளை உள்ளே ஃப்ளோருக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் செல்லும் போதும் தோளைத் தழுவினாற் போல் நெருங்கியே நடந்து வந்தார் அவர்.

உள்ளே ஃப்ளோரில் காமிராமேன், உதவிக் காமிராமேன் இரண்டு மூன்று லைட்பாய்ஸ் எல்லோரும் இருந்தனர். இவர்கள் அங்கே நுழையவும் புரொடக்ஷன் பாயும் இரண்டு கோகோ கோலா பாட்டில்களோடு கூடிய டிரேயுடன் உள்ளே வந்தான்.

சுமதியைத் தாராளமாகத் தொட்டு முகத்தைத் திருப்பி இடுப்பை சரிசெய்து, கைகளை ஒழுங்கு பண்ணிக் காமிராவுக்கு முன் நிற்க வைத்தார் தயாரிப்பாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/81&oldid=1122213" இலிருந்து மீள்விக்கப்பட்டது