பக்கம்:அனிச்ச மலர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

7

போறேன்” என்று உடனே எழுந்து போய்விட்டாள் சுமதி என்று அழைக்கப்பட்ட அழகான அந்தப் பெண்.

அவளுடைய ரூம் மேட், சொந்த சகோதரனின் திருமணத்துக்காக மூன்று நாள் லீவு எடுத்துக் கொண்டு கோவை போயிருந்ததனால் அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள். அதற்காக அவள் பயப்படவில்லை. அதை அவள் விரும்பினாள் என்றுகூடச் சொல்லலாம். தனிமை, கனவு காணும் வசதியைத் தருவதுபோல் வேறெதுவும் தருவதில்லை. அறைக்குச் சென்ற சுமதி பாத்ரூமுக்குள் போய் விளக்கைப் போட்டுக் கொண்டு வாஷ்பேஸினுக்கு மேலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். சிநேகிதிகள் எல்லாம் அடிக்கடிச் சொல்லி வியக்கும் தன் அழகைப் பற்றிய பெருமிதத்தைத் தனக்கே உறுதிப்படுத்திக் கொள்வது போல் கண்ணாடியில் அவள் முகம் களை கொஞ்சியது.

தன் முகத்தைத் தானே நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், உடன் நிகழ்ச்சியாகச் சற்றுமுன் மாலைத் தினசரியிலிருந்து தோழிகள் படித்த விளம்பரத்தையும் நினைவு கூர்ந்தாள். ஏனோ அவளே மறக்க முயன்றும் அந்த விளம்பரம் அவளுக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்து கொண்டிருந்தது. தூங்குவதற்கு முன் வழக்கம்போல் ஃபிரஷ்ஷை எடுத்துப் பற்பசையை அளவாக அதன் மேல் வழிய விட்டுத் தேய்த்தபோது கண்ணாடியில் தெரிந்த முல்லை அரும்பு போன்ற பற்கள் அவளைக் கர்வப்பட வைத்தன. அவளுடைய முக விலாசத்துக்கும், புன்னகைக்கும் யாருமே சுலபமாக மயங்கி வசப்பட்டு விடுவார்கள் என்று தோழிகள் எல்லாம் தங்களுக்குள்ளும் சில வேளைகளில் அவள் காது கேட்கவுமே பேசிக் கொண்டார்கள். இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருந்த சில புதிய இந்தி சினிமா நட்சத்திரங்களோடு அவளை ஒப்பிட்டுப் பரிகாசம் செய்த தோழிகளும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/9&oldid=1146824" இலிருந்து மீள்விக்கப்பட்டது