பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

கைப்பம்பு சமுதாயம்

தண்ணீர் வேண்டுமென்று பம்பை முதன் முதலாக அடிக்கும் பொழுது குழாயில் தண்ணீர் வருவதில்லை, கொஞ்சம் தண்ணீரை நாம் ஊற்றி விட்டு. அடிக்கத் தொடங்கினால் தண்ணீர் வருகிறது. அதுபோலவேதான் வியாபாரமும், நாம் மூலதனமாகக் கொஞ்சமாவது போட்டால்தான் வியாபாரத்தையே ஆரம்பிக்க முடியும். அதிக லாபம் வேண்டுமென்றால் அதிக மூலதனம் போட்டாக வேண்டும். இன்றைய சோஷலிச சமுதாயத்தில், பணக்காரன்தான் பணக்காரனாக முடிகிறது. ஏழைகள் ஏழைகளாகத்தான் ஆக முடியும். ஏனென்றால் நமது சமுதாய அமைப்பு, கார்ப்பரேஷன் கைப்பம்பு போலத்தான் அமைந்திருக்கிறது.

Ο O O

அடிமைப் புகழ்ச்சி

புகழ் பெறுவதற்காக அடிமை போல உழைக்கலாம். ஆனால், புகழ்ச்சிக்காக அடிமைபோல நிற்கக் கூடாது. புகழ்ச்சிக்கு அடிமையாகவும் ஆகக் கூடாது. ஏனெனில், அது அறிவார்ந்தவனாக ஒருவனை உயர்த்தாது.

Ο O O