பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பறிஞ்சிருக்குமோ?... ஊம், அப்பிடித்தான் எனக்கு ரோசனை தாவுது!"

மனம் நாரானால், எண்ணங்கள் பூக்களாகி மலர்ச்சரம் உருவாகக் கேட்கவா வேண்டும்?

அம்பலத்தின் அடி நெஞ்சில் இருந்து நெடுமூச்சு வெளியேறிக் கொண்டிருந்தது. உருமாலை சுற்றிக் கிடந்த துவாலையை எடுத்து மேனியைத் துடைத்துக் கொண்டார்; இடுப்பு வேட்டியின் மடிப்பில் சிந்திக் கிடந்த நரை முடிகளைத் தள்ளிவிட்டார். முதுகுப் பக்கத்தில் அரிப்பு ஏற்பட்டது. துண்டை முதுகு வசமாகக் கொடுத்து வழித்துவிட்டுக் கொண்டார். கொஞ்சம் உணக்கையாக இருந்தது. துண்டை உதறி முண்டாசு கட்டிக் கொண்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. கோழி கூப்பிட்ட நேரத்தில் பழஞ்சோறு ஒரு வட்டி சாப்பிட்டுவிட்டு ஒரு வாய்க்கு வெற்றிலைச் சருகு போட்டுக்கொண்டு, அறந்தாங்கிக் செவ்வாய்ச் சந்தைக்குச் 'சத்தம்' பேசிக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்ற மனிதர், சந்தைப்பேட்டையில் ஒரு லோட்டா சாயாத் தண்ணீர் சாப்பிட்டதுதான், அப்புறம் பச்சைத் தண்ணீரைக்கூட நாடவில்லை. சாயாவுக்கு அந்தச் செட்டியார் காசு கொடுப்பதாக எவ்வளவோ மன்றாடினார். ஏழு காசு விஷயம்! ஆனால் அம்பலம் மறுத்து விட்டார்.